ஆண்டிற்கு 6 கிராம சபை கூட்டம் நடத்தப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின்
உள்ளாட்சிகள் தினமாக நவம்பர் 1ஆம் தேதி கொண்டாடப்படும் எனவும், ஆண்டிற்கு 6 முறை கிராம சபை கூட்டம் நடத்தப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.
இதுக்குறித்து பேசும்போது ," கிராமப்புற மக்களிடையே திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், அரசின் அனைத்து செயல்பாடுகளிலும் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்திடவும், மக்கள் பங்கேற்பை ஊக்குவிக்கவும், இடையில் நடத்தப்படாமல் போன இந்த நிகழ்வு, மக்கள் இயக்கமாக மீண்டும் நவம்பர் 1 ஆம் தேதி, "உள்ளாட்சிகள் தினமாக" கொண்டாடப்படும்.
ஒவ்வொரு ஊராட்சியிலும் அனைத்து வாக்காளர்களையும் உள்ளடக்கி, கிராம சபை என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, கிராம சபைக்கென குறிப்பிட்ட அதிகாரங்களும், பொறுப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. 1998 ஆம் ஆண்டில் முதல் ஆண்டிற்கு 4 முறை, குறிப்பிட்ட நாட்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வந்தாலும், அவ்வப்போது சிறப்பு கிராம சபைக் கூட்டங்களும் தேவையின் அடிப்படையில் மிகக் குறுகிய கால அறிவிப்புகள் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன.
எனவே, இதைக் கருத்திற்கொண்டு, குறிப்பட்ட கால இடைவெளியில் நடத்த வேண்டிய கிராம சபைக் கூட்டங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, மக்களின் பங்கேற்பினை உறுதி செய்வது அவசியம் எனக் கருதி, இந்த ஆண்டு முதல், ஆண்டிற்கு 6 கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படும். அந்த வகையில், ஜனவரி 26- குடியரசு தினம், மே- 1 தொழிலாளர்
தினம், ஆகஸ்ட்- 15 சுதந்திர தினம், அக்டோபர்- 2 அண்ணல் காந்தியடிகள் பிறந்த தினம் ஆகிய நாட்களில் நடைபெற்று வரக்கூடிய கிராம சபை கூட்டங்கள், இனி வரும் காலங்களில், கூடுதலாக மார்ச்- 22 உலக தண்ணீர் தினம் அன்றும், நவம்பர்- 1 உள்ளாட்சிகள் தினம் அன்றும் நடத்தப்படும்.
பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கும் அமர்வுப் படியினை உயர்த்தி வழங்கிடக் கோரி பல்வேறு மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து கோரிக்கைகள் வரப்பெற்றதன் அடிப்படையில், மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பிரதிநிதிகளுக்கு கூட்டங்களில் கலந்து கொள்ளும் நாட்களில் அமர்வுப் படித் தொகை பத்து மடங்காக உயர்த்தி வழங்கப்படும் என்றும், கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கு அமர்வுப் படித் தொகை ஐந்து மடங்காக உயர்த்தி வழங்கப்படும்.
ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள் தங்களின் ஊராட்சி ஒன்றிய எல்லைக்குள் செயல்படுத்தப்படக்கூடிய பல்வேறு திட்டப் பணிகளைக் கண்காணித்திட ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள் அந்தந்த ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளைத் திறம்படக் கண்காணித்திட ஏதுவாக, தமிழகத்திலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்களுக்கும் புதிய வாகனங்கள் வழங்கப்படும்.
சிறப்பாகச் செயல்படக்கூடிய கிராம ஊராட்சிகளுக்கு "உத்தமர் காந்தி விருது" 2022 ஆம் ஆண்டு முதல் மீண்டும் வழங்கப்படும் என்பதையும், ஆண்டுதோறும் மாவட்டத்திற்கு ஒன்று வீதம், சிறந்த 37 கிராம ஊராட்சிகளுக்கு பத்து இலட்சம் ரூபாய் வீதம் வழங்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை மற்றும் சமூக நலத் துறை போன்ற முக்கிய துறைகளின் மூலம் செயல்படுத்தப்படக்கூடிய அரசின் பல்வேறு திட்டங்களை கிராம அளவில் ஒருங்கிணைத்து செவ்வனே செயல்படுத்திட 600 ஊராட்சிகளில் "கிராமச் செயலகங்கள்" இந்த ஆண்டே கட்டப்படும்.
இந்த புதிய முன்னெடுப்பின் முதற்கட்டமாக, இந்த ஆண்டு 600 புதிய கிராமச் செயலகக் கட்டடங்கள், ஒவ்வொன்றும் சுமார் 40 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும். திராவிட முன்னேற்றக் கழக அரசின் மீது தமிழக மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து, எங்களுக்கு இமாலய வெற்றியைத் தந்தார்கள்.தமிழக மக்கள் எங்களது அரசின் மீது வைத்திருக்கக்கூடிய நம்பிக்கை என்றென்றும் வீண்போகாத வண்ணம் இந்த அரசு தொடர்ந்து செயல்படும் என்று இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் முதலமைச்சர் பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu