/* */

சென்னை அண்ணாசாலையில் போக்குவரத்து மாற்றம்!

தமிழ்நாட்டில் கடந்தாண்டு 55 ஆயிரம் சாலை விபத்துகள் நடந்துள்ளன. 14,250 பேர் உயிரிழந்துள்ளதாக காவல் துறை தரப்பு தகவல்

HIGHLIGHTS

சென்னை அண்ணாசாலையில் போக்குவரத்து மாற்றம்!
X



தமிழ்நாட்டில் கடந்தாண்டு 55 ஆயிரம் சாலை விபத்துகள் நடந்துள்ளன. அதில் 14 ஆயிரத்து 250 பேர் உயிரிழந்துள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு சாலை விபத்துகளை குறைப்பதற்காக காவல் துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, சென்னையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளைக் குறைக்கும் வகையில், போக்குவரத்து காவல் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், போக்குவரத்து விதிகள் மற்றும் மாற்றங்கள் தொடர்பான பணிகளில் அந்தந்த மாவட்ட போக்குவரத்து உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் வகுத்துக் கொள்ளலாம் எனச் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

அந்த வகையில், அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதியான திருவல்லிக்கேணி வாலாஜா சாலையிலிருந்து பல்லவன் சாலைக்குச் செல்ல போக்குவரத்து காவல் துறையினர் தடை விதித்துள்ளனர். குறிப்பாக, திருவல்லிக்கேணியிலிருந்து வாலாஜா சாலை வழியாக சிம்சன் சிக்னலுக்கு வலதுபுறம் திரும்ப அனுமதி இல்லை.வாகனங்கள் அண்ணாசாலை தாராபூர் டவர்ஸ் மற்றும் பிளாக்கர்ஸ் சாலை வழியாக செல்ல போக்குவரத்து காவல் துறையினர் அனுமதித்துள்ளனர்.

மேலும், அண்ணாசாலை ஸ்பென்சர் சிக்னலிலிருந்து புகாரி ஓட்டல் சிக்னல் நோக்கி வரக்கூடிய வாகனங்கள் டேம்ஸ் சாலை வழியாக திருப்பிவிடப்பட்டு, பிளாக்கர்ஸ் சாலை வழியாக, சிம்சன் சிக்னலுக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றன. சிம்சன் சிக்னல், வாலாஜா சாலை, தாராபூர் டவர்ஸ் என குறுகிய இடைவெளியில் மூன்று சிக்னல்கள் இருப்பதால் 'பீக் அவர்ஸில்' அதிகப்படியானப் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் இந்தப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.


மேலும், ரிச்சி தெரு அருகே அதிகளவில் வாகனங்கள் பார்க்கிங் செய்யப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாலும் இந்த தற்காலிகமாகப் போக்குவரத்து மாற்றம் காரணம் எனவும் போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். வாகன ஓட்டிகளிடையே கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து நீட்டிப்பு குறித்து ஆலோசிக்க போக்குவரத்து காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர். இந்தப் போக்குவரத்து மாற்றங்கள் தொடர்பானப் பணிகளில் 20 போக்குவரத்து காவல் துறையினர் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.இந்தப் போக்குவரத்து மாற்றத்தால் அண்ணா சாலை தலைமை தபால் நிலையத்திற்குச் செல்ல சிரமம் ஏற்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Updated On: 10 April 2022 5:54 AM GMT

Related News