சென்னை காவல்துறைக்கு 53 புதிய வாகனங்கள்: முதல்வர் தொடங்கிவைப்பு
சென்னை தலைமை செயலகத்தில் புதிய வாகனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், சென்னை பெருநகர காவல்துறையின் பயன்பாட்டிற்காக 6 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 25 ஹூண்டாய் கிரெட்டா, 8 இன்னோவா கிரிஸ்டா மற்றும் 20 பொலிரோ ஜீப் ஆகிய வாகனங்களின் சேவைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை பெருநகர காவல் துறையின் சேவையை மேம்படுத்துவதற்காகவும், சென்னை பெருநகர காவல் எல்லைக்குள் வசிக்கும் பொதுமக்களுக்கு விரைந்து சேவைகளை வழங்குவதற்காகவும் இவ்வரசு கடந்த இரண்டரை ஆண்டுகளில் ரூ.59.73 கோடி மதிப்பீட்டில் 283 நான்கு சக்கர மற்றும் இருசக்கர வாகனங்களை கொள்முதல் செய்து காவல்துறையின் பயன்பாட்டிற்காக வழங்கியுள்ளது.
பேரிடர் மேலாண்மை நிதியின் கீழ், அத்தியாவசிய தேடல் மற்றும் தேவைக்கான உபகரணங்களை கொள்முதல் செய்ய 74.62 இலட்சம் ரூபாயும், சைபர் செயலி மற்றும் சைபர் விழிப்புணர்வுக்கு 54 இலட்சத்து 97 ஆயிரத்து 200 ரூபாயும், காவல் நிலையம், கட்டடங்கள், தங்குமிடம் மற்றும் குடியிருப்புக்கு 35.82 கோடி ரூபாயும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், உபகரணங்கள் கொள்முதல் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் 44.38 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.
2023-24ஆம் ஆண்டிற்கான காவல்துறை மானியக் கோரிக்கையில், மாநிலத்திலுள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு முக்கியமாக, சரக எல்லைக்குட்பட்ட மிக முக்கிய பிரமுகர்களின் வழிக்காவல் பணி, சட்டம் மற்றும் ஒழுங்கு சம்பவங்கள், குற்றங்களைத் தடுப்பது மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது உள்ளிட்ட பல்வேறு முனைகளில் காவல்துறையின் செயல்திறனை மேம்படுத்தும் பொருட்டு, கழிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு ஈடாக 283 நான்கு சக்கர வாகனங்கள் வாங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பின் ஒரு பகுதியாக, சென்னை பெருநகர காவல் துறையின் பயன்பாட்டிற்காக 6 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பிலான மேம்படுத்தப்பட்ட நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய 25 ஹூண்டாய் கிரெட்டா, 8 இன்னோவா கிரிஸ்டா மற்றும் 20 பொலிரோ ஜீப் வாகனங்களின் சேவைகளை முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதன்மூலம், சென்னை பெருநகர காவல் எல்லைக்குள் குற்றங்களை களையவும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், சட்டம் ஒழுங்கினை சிறந்த முறையில் பராமரிக்கவும், பொதுமக்களுக்கு, குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கிடவும் 25 வாகனங்கள் பயன்படுத்தப்படும். மேலும், இவ்வாகனங்களிலிருந்து சென்னை பெருநகர காவல் துறையின் காவல் துணை ஆணையாளர்கள், காவல் உதவி ஆணையாளர்கள், சட்டம் மற்றும் ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் சிறப்புப் பிரிவு காவல் ஆய்வாளர்களின் பயன்பாட்டிற்காக மற்ற வாகனங்கள் வழங்கப்படும்.
இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முதன்மை செயலாளர் அமுதா, காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu