சென்னையில் மழைநீரை அகற்றும் பணியில் 501 வாகனங்கள் பயன்பாடு

சென்னையில் மழைநீரை அகற்றும்   பணியில் 501 வாகனங்கள் பயன்பாடு
Heavy Rain News -சென்னையில் 501 கழிவுநீர் வாகனங்கள் மூலம் மழைநீர் மற்றும் கழிவு நீர் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளன.

Heavy Rain News -தமிழகத்தில் பருவமழை தீவிரமானதை தொடர்ந்து சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடியிருப்பு பகுதிகள், சாலைகள், தாழ்வான பகுதிகள் மற்றும் பொது வெளிகளில் தேங்கியுள்ள மழை நீரினை அகற்றும் பணிகளை 501 கழிவுநீர் வாகனங்கள் மூலம் மழைநீர் மற்றும் கழிவு நீர் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை 2000 களப்பணியாளர்களைக் கொண்டு தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் பேரிடர் கால நிவாரண பணிகள் மேற்கொள்ளும் வகையில் 15 கண்காணிப்பு பொறியாளர்கள் தலைமையில் 15 செயற்பொறியாளர்கள் ஒருங்கிணைப்பு அலுவலர்களாகவும் 30 உதவி பொறியாளர்கள் தாழ்வான பகுதிகள் மற்றும் மழைநீர் அதிகமாக தேங்கியுள்ள பகுதிகளில் களப்பணிகள் மேற்கொள்ள ஏதுவாக, மேலும், அனைத்து பகுதி அலுவலகங்களிலும் இரவுநேரங்களில் மேற்கொள்ளப்படும் களப்பணிகளை கண்காணிப்பதற்காக 15 செயற்பொறியாளர்கள் சிறப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மழைநீர் அகற்றும் பணிகளில் 57 எண்ணிக்கையிலான நீர் உறிஞ்சும் வாகனங்கள், கழிவுநீர் செல்லக்கூடிய பிரதான குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்வதற்காக 162 எண்ணிக்கையிலான ஜெட்ராடிங் இயந்திரங்கள் மற்றும் கழிவு நீர் குழாய்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் குழாய் இணைப்புகளில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்யும் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள ஏதுவாக 282 எண்ணிக்கையிலான தூர்வாரும் ஆட்டோக்கள் ஆக மொத்தம் 501 கழிவுநீர் இயந்திரங்கள் வாகனங்கள் மழைநீர் மற்றும் கழிவு நீர் அகற்றும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

மேலும், கழிவுநீர், குடிநீர் குழாய்களில் கலக்காமல் இருப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. கழிவுநீர் செல்லும் பிரதான குழாய்களில் தூர்வாரி பராமரிப்பு பணிகள் கடந்த 3 மாத காலமாக மேற்கொள்ளப்பட்டு தற்போது அடைப்பு ஏதும் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் தொடர் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொதுமக்கள் கீழ்கண்ட எண்களில் 044-45674567 (20 இணைப்புகள்) மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண். 1916 என்ற எண்களில் தொடர்பு கொண்டு மழைநீர் மற்றும் கழிவு நீர் தொடர்பான புகார் மற்றும் குறைபாடுகளை தெரிவிக்கும் பட்சத்தில் உடனடியாக சரி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 321 எண்ணிக்கையிலான கழிவுநீர் நீரேற்று நிலையங்கள் மூலம் கழிவுநீர் உறிஞ்சப்பட்டு 5 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு முறையாக வெளியேற்றப்பட்டு வருகிறது. பருவமழைக்கு முன்னதாக நாள் ஒன்றுக்கு சராசரியாக 640 எம்.எல்.டி அளவிலான கழிவுநீர் உறிஞ்சப்பட்டு சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பருவமழை முன்னிட்டு நாள் ஒன்றுக்கு தற்போது 750 எம்.எல்.டி வரையிலான கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் அகற்றும் பணிகளில் 2000 திற்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் 24 மணி நேரமும் மழை நீரினை அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு சென்னை குடிநீர் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story