சென்னையில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 22 ஆயிரம் பேர்: போலீஸ் கமிஷனர்
சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால்
சென்னை ரிப்பன் மாளிகையில் தேர்தல் பறக்கும் படையினருடனான ஆலோசனை கூட்டம், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோர் தலைமையில் நடந்தது.
கூட்டத்திற்கு பின், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது: சென்னையில் உள்ள, பறக்கும் படையினரின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்களுக்கு அறிவுரையும் வழங்கியுள்ளோம். சென்னையில் இதுவரை, 45 பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
நாளை முதல் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை, ஒரு மண்டலத்தற்கு ஆறு குழு வீதம் 90 தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபடுகின்றனர். அதிகாலை நேரங்களிலும், இரவு நேரங்களிலும் சோதனை தீவிரப்படுத்தப்படும். தேர்தல் விதிமீறல்கள், பணப்பட்டுவாடா குறித்த புகார் அளிக்க, 1800 425 7012 என்ற, இலவச எண்ணில் புகார் அளிக்கலாம்.
புகார் வந்தவுடன் பறக்கும் படையினர் விரைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை, தேர்தல் விதிகளை மீறியது தொடர்பாக 59 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. வரும் 18ம் தேதி, வேட்பாளர்கள் முன்னிலையில், 5,794 ஓட்டுச்சாவடிகளுக்கான மின்னணு இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படும். தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 27 ஆயிரத்து, 812 பேருக்கு, குலுக்கல் முறையில் அவர்கள் பணியாற்றும் ஓட்டுச்சாவடிகள் தேர்ந்தெடுக்கப்படும். சென்னையில் இதுவரை, 1.45 கோடி பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுஉள்ளது என்று கூறினார்.
போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறியதாவது: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், தற்போது வரை தேர்தல் பணிகள் அமைதியாக நடந்து வருகிறது. தொடர்ந்து, தேர்தல் முடியும் வரை அமையாக நடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில், 4,800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் நாளான, 19ம் தேதி, 18 ஆயிரம் போலீசாரும், போலீசார் அல்லாத ஊர்காவல் படையினர் உள்ளிட்டோர் 4,000 பேர் என, 22 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu