சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலர் 163 ஆவது பிறந்தநாள் விழா

சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலர் 163 ஆவது பிறந்தநாள் விழா
X
அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்று மரியாதை செலுத்துகிறார்கள்.

சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலர் 163ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் - "சிங்காரவேலர் மாளிகையில்" அமைந்துள்ள அவரின் சிலைக்கு நாளை காலை 10.00 மணி அளவில் தமிழ்நாடு அரசின் சார்பில், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்று மரியாதை செலுத்துகிறார்கள்.

சிறந்த சீர்திருத்தவாதி என்றும், தேர்ந்த பொதுவுடைமைவாதி என்றும், சிந்தனைச் சிற்பி என்றும் நம் அனைவராலும் அன்புடன் அழைத்துப் போற்றப்படும் ம. சிங்காரவேலர், கடந்த 1860ஆம் ஆண்டு, பிப்ரவரித் திங்கள் 18ஆம் நாள் சென்னை மயிலாப்பூரில் பிறந்தார். மிகவும் பின்தங்கிய மீனவர் சமுதாயத்தைச் சார்ந்திருந்தாலும், சிறுவயது முதற்கொண்டே கற்றறிவதிலும், அரிய பல நூல்களைத் தேடிப் படிப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த காரணத்தினால், தமிழ், ஆங்கிலம், இந்தி, உருது, பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட பல மொழிகளைக் கற்றறிந்தார். ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்கள் அனுதினமும் அல்லல்படுவதைக் கண்டு வெகுண்டெழுந்து சட்டம் பயின்றதோடு, அவர்களின் உரிமைக்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார். தனது இல்லத்திலேயே 20,000க்கும் மேற்பட்ட அரிய பல புத்தகங்களைக் கொண்ட நூலகத்தினையும் அமைத்திருந்தார்.

தனது இளமைப் பருவந்தொட்டு புத்தகங்களை விரும்பிப் படித்தனால், உலக அரசியலைப் பற்றிய பரந்துபட்ட ஞானமும், புரிதலும் தன்னகத்தே கொண்டு பொதுவுடைமையின் பால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, 1918ஆம் ஆண்டு தமிழறிஞர் திரு.வி. கலியாணசுந்தரனார் அவர்களால் தொடங்கப்பட்ட, " சென்னை தொழிலாளர் சங்கத்தில் " இணைந்து பணியாற்றினார். அடிமை இருள் சூழ்ந்து கிடந்த இந்திய மண்ணில் விடுதலைச் சுடர் ஒளிவிட வேண்டும் என்ற வேட்கையுடன், சுதந்திரக் கனலை மூண்டெழச் செய்தவர் சிங்காரவேலர். பொதுவுடைமைச் சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் மகத்தான பணிகளுக்காகச் சிந்தனைச் சிற்பி' என்று போற்றிப் புகழப்பட்டார். உழைக்கும் மக்களின் உயிர்நாடியாய் இருந்து விடுதலைப் போராட்டத்தினை உயிர்ப்பித்துக் காட்டினார். அடிமைப் பிடியிலிருந்து தொழிலாளர்களை மீண்டெழச் செய்து விட்டால், இந்தியாவிற்கான விடுதலை தானே கனிந்துவிடும் என்கிற உயரிய நோக்கில் ஏழைகள் தேசம் ஏழைகளுக்கே என்ற முழக்கத்தையும் முன் வைத்தார்.

1923ஆம் ஆண்டு மே முதல் தேதி இந்திய வரலாற்றில் முதன் முறையாக, செவ்வண்ணக் கொடியோடு தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மே முதல் நாளைத் தொழிலாளர் தினமாகக் கொண்டாடினார். கொள்கையில் அவர் கொண்டிருந்த உறுதிக்குச் சான்றாக, சென்னை கடற்கரையில் உழைப்பாளர் சிலையினை நிறுவி பெருமைப்படுத்தினார் பெருந்தலைவர் காமராஜர்.

பல்வேறு மொழிகளைக் கற்றுணர்ந்தபோதும், தாய்மொழிக் கொள்கையில் தளராத நெஞ்சுரம் கொண்டிருந்த சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் அவர்கள், சென்னை மாநகராட்சி உறுப்பினராகப் பதவியேற்றபோது தமிழில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டதோடு, "உறுப்பினர்கள் அனைவரும் இனி தமிழில் தான் பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும்" என்று தீர்மானம் கொண்டு வந்து, தமிழ்த்தென்றல் வீசிடக் காரணமாக இருந்ததுடன், தான் சார்ந்திருந்த வட்டத்தில் முதன் முறையாக மதிய உணவுத்திட்டத்தினை வெற்றிகரமாகச் செயல்படுத்தினார். தொழிலாளார்கள் நலனுக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட அவருடைய வாழ்வின் பெரும்பகுதி போராட்டம், சிறை தண்டனைகள் எனத் தொடர்ந்த போதிலும், அறிவியல், விஞ்ஞானப் பொருளியல் கருத்தில் ஆழமான சிந்தனையாளராகவும், சுயமரியாதை, சமதர்மக் கொள்கையில் தளராத உறுதி கொண்டவராகவும் வாழ்ந்தார்.

ஈ.வே.ரா. பெரியார் சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலரைப் பற்றிக் கூறும் போது எனக்குத் தெரிந்து அவரைப் போன்றதொரு அறிஞரைக் கண்டதில்லை; அவருக்குப் பிறகு அப்படி ஒரு அறிஞர் தோன்றவே இல்லை' எனப் புகழாரம் சூட்டுமளவிற்கு பகுத்தறிவுக் கொள்கையைப் பரப்புரைத்து வந்தார். பேரறிஞப் பெருந்தகை அண்ணா "வெட்டுக்கிளிகளும், பச்சோந்திகளும் புகழப்படும் நேரத்தில், இந்தப் புரட்சிப் புலியாம் சிங்காரவேலரை மக்கள் மறந்தனர்" என்று கூறியுள்ளார். பாவேந்தர் பாரதிதாசன் "போர்க்குணம் மிகுந்த நல்செயல் முன்னோடி ; பொதுவுடைமைக் கேகுக அவன் பின்னாடி" என்று பாடியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, அவரின் பிறந்த நாளை அரசு விழாவாக் கொண்டாட அறிவித்து,சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 'சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் மாளிகை' என்று பெயர் சூட்டல், அவ்வளாகத்தில் அன்னாரின் திருவுருவச்சிலை திறப்பு. 2006ஆம் ஆண்டு அன்னாரின் நினைவாக அஞ்சல் தலை வெளியீடு, சிங்காரவேலர் நினைவு மீனவர் வீட்டுவசதித் திட்டம்' எனப் பல பெருமைகளைச் சேர்த்தார்.

எந்நேரமும் ஒடுக்கப்பட்ட மக்களை, ஏழைத் தொழிலாளர்களின் வாழ்வுதனை மேம்படுத்திட வேண்டுமென்கிற உயரிய நோக்கில், தனது சிந்தனையாலும் செயலாலும் அல்லும் பகலும் அயராது உழைத்திட்ட சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலர் அவர்கள் பிறந்த இந் நன்நாளில் அன்னாரின் அருமை பெருமைகளை நினைவு கூர்ந்து போற்றி மகிழ்வோம் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
பிஸிக்ஸ், தொழில்நுட்பத்துடன் எவ்வாறு தொடர்புடையது என்பதை தெரிஞ்சிக்கலாம் வாங்க