பொங்கல் சிறப்பு பேருந்துகள் கிளம்பும் இடங்கள் வெளியீடு
பொங்கல் பண்டிகைக்கான சிறப்புப் பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. இவை எந்தெந்த இடத்திலிருந்து கிளம்பும் என்பது குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து இன்று முதல் புதன்கிழமை வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன், 4,078 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 10,228 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இன்று மட்டும் 197 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. பிற ஊர்களில் இருந்து ஜனவரி 13 ம் தேதி வரை 5,993 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
இதில் மாதவரம் புதிய பேருந்துநிலையம்- செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை செல்லும் பேருந்துகள் செல்லும். கே.கே.நகர் மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையத்திலிருந்து ஈ.சி.ஆர். வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். அது போல் தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து-திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் மற்றும் போளூர், சேத்துபட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் செல்லும்.பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சீபுரம், செய்யாறு, ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி செல்லும் பேருந்துகள் செல்லும்.
கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, இராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu