தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மீண்டும் மிரட்ட வருகிறது கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மீண்டும் மிரட்ட வருகிறது கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…
X

சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அலுவலகம். (கோப்பு படம்).

தமிழகத்தில் டிசம்பர் 21 ஆம் தேதி 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாத இறுதி வாரம் அல்லது அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவது வழக்கம். அதன்படி நடப்பு ஆண்டில் அக்டோபர் 1 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. வழக்கத்தை விட இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் கூடுதலாகவே மழை பெய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே வங்கு கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக கடந்த ஒருவாரத்திற்கு முன்பு தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்தது. குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களில் மாண்டஸ் புயலின் போது நல்ல மழை பெய்தது.

வடகிழக்கு பருவமழை 2 சதவீதம் அதிகம்:

இந்த நிலையில், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட இரண்டு சதவீதம் கூடுதலாக பொழிந்துள்ளதாக சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:

தமிழ்நாட்டில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இதுவரை வடகிழக்கு பருவமழை 2 சதவீதம் கூடுதலாக பொழிந்துள்ளது. அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 61 சதவீதம் கூடுதலாக வடகிழக்கு பருவமழை பெய்துள்ளது. ஈரோடு மாவட்டத்தை அடுத்து அதிகபட்சமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 55 சதவீதம் அளவுக்கு பருவமழை பொழிந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் 42 சதவீதமும், கோவை மாவட்டத்தில் 41 சதவீதமும், கன்னியாகுமாி மாவட்டத்தில் 39 சதவீதமும், கிரிஷ்ணகிாி மாவட்டத்தில் 34 சதவீதமும், திருப்பூர் மாவட்டத்தில் 26 சதவீதமும், திருவள்ளூர் மாவட்டத்தில் 17 சதவீதமும், இயல்பை விட கூடுதலாக மழை பெய்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 39 சதவீதமும், திண்டுக்கல் மாவட்டத்தில் 19 சதவீதமும், மதுரை மாவட்டத்தில் 17 சதவீதமும், சென்னை மாவட்டத்தில் 16 சதவீதமும், தருமபுாி மாவட்டத்தில் 13 சதவீதமும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 11 சதவீதமும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 சதவீதமும், சேலம் மாவட்டத்தில் 8 சதவீதமும் கூடுதலாக மழை பெய்துள்ளது.

மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு:

தமிழகத்தில் வட மாவட்டங்களில் மாண்டஸ் புயல் காரணமாக பலத்த பெய்த மழை நிலையில், தற்போது நிலைமை ஓரளவு சீராகி உள்ளது. இதற்கிடையே, மீண்டும் 9 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:

தமிழ்நாட்டில் டிசம்பர் 21 ஆம் தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்ஞாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!