சென்னை-நெல்லை வந்தே பாரத் கால அட்டவணை தயாரிக்கும் பணி தீவிரம்
வந்தே பாரத் ரயில் - கோப்புப்படம்
இந்தியாவில் வந்தே பாரத் ரயில் சேவை கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஏற்கனவே சென்னை- கோவை மற்றும் சென்னை- மைசூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. சென்னை- நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் இயக்கப்பட உள்ளது. ஏற்கனவே 2 வந்தே பாரத் ரயில்கள் சென்னையிலிருந்து இயக்கப்பட்டு வருகிற நிலையில் 3-வது ரயிலாக சென்னையில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படுகிறது.
சென்னை-நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் இயக்க திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது தண்டவாள மேம்பாட்டுப்பணிகள் முடிவடையும் தருவாயில் இருப்பதால் இந்த மாதமே தொடங்கப்பட இருக்கிறது.
வழக்கமாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் நெல்லையில் இருந்து சென்னை வருவதற்கு 10 மணி நேரம் ஆகும். 8 பெட்டிகளுடன் சீறிப்பாய்ந்து செல்லும் வந்தே பாரத் ரயில் நெல்லையில் இருந்து 8 மணிநேரத்தில் சென்னை வந்தடையும்.
வந்தே பாரத் ரயிலில் உட்கார்ந்து செல்லும் வகையில் இருக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வந்தே பாரத் ரயிலுக்கான வழித்தடம் மற்றும் ரயில் நிலையங்களில் நின்று, புறப்பட்டுச்செல்லும் நேரம் தொடர்பான கால அட்டவணை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னை-நெல்லை இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயில் திருச்சி, மதுரை உள்பட சில முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று கூறப்படுகிறது.
விரைவில் கால அட்டவணை தயாரிக்கும் பணி முடிந்து, வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. வருகிற 6-ம் தேதியன்று சென்னை-நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுபற்றி தெற்கு ரயில்வே உயர் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. எனினும் இந்த ரயிலை இயக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளோடு தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu