ரூ.564 கோடி நிலக்கரி இறக்குமதி முறைகேடு வழக்கில் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).
தூத்துக்குடி அருகே அமைந்துள்ள கோஸ்டல் எனர்ஜன் என்ற தனியார் அனல் மின்நிலையத்தின் இயக்குநராக இருந்து வருபவர் அகமது புகாரி. இவர், கடந்த 2011-12 மற்றும் 2014-15 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே இந்தோனேசியாவில் இருந்து தரம் குறைந்த நிலக்கரியை, உயர்தர நிலக்கரி என இறக்குமதி செய்து சுமார் 564 கோடி ரூபாய் அரசை ஏமாற்றியதாகவும், மோசடி செய்ததாகவும் தேசிய அனல் மின் கழகம், உலோகங்கள் மற்றும் தாதுக்கள் விற்பனை நிறுவனம், ஆரவளி தனியார் மின் நிறுவனம் ஆகியவற்றின் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதேபோல, தரமற்ற நிலக்கரியை விற்பனை செய்ததில் 564 கோடியே 48 லட்ச ரூபாயை அகமது புகாரியின் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்துள்ளதாக அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன் அகமது புகாரியின் கோஸ்டல் எனர்ஜன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான 557 கோடி ரூபாயையும் அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கோஸ்டல் எனர்ஜன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் அகமது புகாரியின் ஜாமீன் மனுக்கள் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 16 ஆம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி அமலாக்கத் துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. அந்த முறையீடு மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, சிறப்பு நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதித்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார்.
அதில், ஜாமீன் வழங்கிய விசாரணை நீதிமன்றம் போதுமான காரணங்களை தெரிவிக்கவில்லை. எனவே அமலாக்கதுறை தாக்கல் செய்த மேல் முறையீடு மனுவை ஏற்பதாகவும், ஜாமீன் வழங்கிய சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யவதாகவும் நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu