தாழ்தள பேருந்து ஒப்பந்த விவகாரம்: போக்குவரத்து துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

தாழ்தள பேருந்து ஒப்பந்த விவகாரம்: போக்குவரத்து துறைக்கு நீதிமன்றம் உத்தரவு
X

சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).

சென்னையில் எந்தெந்த சாலைகளில் தாழ்தள பேருந்துகளை இயக்க முடியும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு போக்குவரத்து துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு போக்குவரத்து கழகங்களுக்காக ஆயிரத்து 107 பேருந்துகள் கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தில், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில், தாழ்தள பேருந்துகளையும் கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இருவகையான பேருந்துகளும் எவ்வாறு மாற்றுத் திறனாளிகளுக்கு ஏதுவாக இயக்கப்படும் என்பது தொடர்பான செய்முறை விளக்கத்தை வழங்கும்படி அரசு தரப்புக்கு உத்தரவிட்டு இருந்தது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு போக்குவரத்து துறை தரப்பில், 650 மில்லி மீட்டர் உயரம் கொண்ட தளங்களுடன் கூடிய பேருந்துகளை உற்பத்தி செய்ய ஒரு நிறுவனம் மட்டுமே தயாராக உள்ளதாகவும், அதற்கும் 14 மாதங்கள் ஆகும் என்றும் பதிலளித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் 442 தாழ்தள பேருந்துகளும் மூன்று மாதங்களில் இயக்கப்படும் என்றும், 100 மின்சார தாழ்தள பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது என்றும் அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் நீதிபதிகள், சென்னையில் தாழ்தள பேருந்துகளை எந்தெந்த சாலைகளில் இயக்க முடியும், எந்தெந்த சாலைகளில் இயக்க முடியாது என்பது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய தமிழ்நாடு போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி 9 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!