பெண்ணை ஏமாற்றிய வழக்கில் திருச்சி சிறை நன்னடத்தை அதிகாரிக்கு ஆயுள் தண்டனை
திருச்சியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர், குரூப் 1 தேர்விற்கான பயிற்சி வகுப்புக்காக சென்னையில் பயிற்சி பெற்றபோது, சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த பெண்ணுடன் பழகி உள்ளார். பின்னர், அந்தப் பெண்ணுடன் நெருங்கி பழகிய சத்தியமூர்த்தி அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி உள்ளார். இதனால், இருவரும் பலமுறை தனிமையில் சந்தித்துள்ளனர்.
இதையெடுத்து, குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற சத்தியமூர்த்தி சைதாப்பேட்டை சிறை நன்னடத்தை அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். அப்போது, அந்த பெண்ணிடம் இருந்து விலகத் தொடங்கிய சத்தியமூர்த்தி தனது தங்கையின் திருமணம், பெற்றோர் சம்மதமின்மை போன்ற காரணங்களை கூறி உள்ளார்.
மேலும், அந்த பெண்ணை திருமணம் செய்வதை தவிர்த்து வந்ததாகவும், அதன் பிறகு தனது உறவுக்கார பெண்ணுடன் நிச்சயமாகிவிட்டதாகவும் கூறி உள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண், சத்தியமூர்த்தியின் பெற்றோரிடம் முறையிட்டு உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சத்தியமூர்த்தியின் பெற்றோர் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று சாதி பெயரை சொல்லி அந்த பெண்ணையும், அவரது தாயை திட்டியதாகவும், மகன் ஏமாற்றியதற்காக பணம் கொடுப்பதாகவும் கூறி மிரட்டினராம்.
இதுதொடர்பாக அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில், சத்தியமூர்த்தி மற்றும் அவரது பெற்றோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளின் கீழ் சைதாப்பேட்டை குமரன் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு வன்கொடுமை தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சிறப்பு வழக்கறிஞர் சுதாகர் ஆஜராகி வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி பிறப்பித்த உத்தரவில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிறை நன்னடத்தை அதிகாரி சத்தியமூர்த்தி, அவரது தந்தை ரெங்கு, தாய் சாரதா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், சத்தியமூர்த்திக்கு 21 ஆயிரம் ரூபாய் அபராதமும், பெற்றோருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி அல்லி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu