மத்திய சென்னை தொகுதி: ஒரு பார்வை

மத்திய சென்னை தொகுதி: ஒரு பார்வை
X
திமுகவின் கோட்டையாக கருதப்படும் இந்த தொகுதியில் முக்கிய தலைவர்களான கலாநிதி, முரசொலி மாறன் மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் மத்திய சென்னையில் வெற்றி பெற்றுள்ளனர்

மத்திய சென்னை மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 4வது தொகுதி ஆகும். இது இந்தியாவின் மிகச்சிறிய தொகுதிகளில் ஒன்றாகும்.

2008 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்கு முன், மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் பூங்கா நகர், புரசைவாக்கம், எழும்பூர், அண்ணா நகர், ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. இவற்றில் தனித் தனி தொகுதிகளாக இருந்து வந்த சேப்பாக்கமும், திருவல்லிக்கேணியும் ஒரே தொகுதியாக்கப்பட்டன. பிரிக்கப்பட்ட வில்லிவாக்கம் தொகுதி, சென்னை மத்திய தொகுதியில் இணைக்கப்பட்டது.

தமிழகத்தின் தலைநகரின் மத்தியில் அமைந்துள்ள மத்திய சென்னை தொகுதி தி.மு.க.,வின் கோட்டையாக இருந்து வருகிறது.

1977 தேர்தலில் தான் மத்திய சென்னைத் தொகுதி உருவானது. முதல் தேர்தலில் ஸ்தாபன காங்கிரஸ் வெற்றி பெற்றது. இரண்டாவது தேர்தல் முதல் தி.மு.க ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 1980 தேர்தலில் தி.மு.க வேட்பாளர் கலாநிதி வெற்றி பெற்றார். 1984 தேர்தலிலும் தி.மு.க வேட்பாளர் கலாநிதியே வெற்றி பெற்றார்.

1989,1991 ஆகிய தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் அன்பரசு வெற்றி பெற்றார்.

1996 தேர்தலில் தொகுதி மீண்டும் தி.மு.க வசமானது. மத்திய சென்னை தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் அடுத்தடுத்து நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்று ஹாட்ரிக் அடித்தார். முரசொலி மாறன் 1996, 1998, 1999 ஆகிய 3 தேர்தல்களிலும் வென்றார்.

2004 தேர்தலில் முரசொலி மாறன் மகன் தயாநிதி மாறன் முதன்முறையாக களமிறங்கினார். அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி ஆன தயாநிதி மாறன் மத்திய அமைச்சர் ஆனார். மீண்டும் 2009 தேர்தலிலும் தயாநிதி மாறன் வெற்றிப் பெற்று மத்திய அமைச்சர் ஆனார்.

2014 தேர்தலிலும் மீண்டும் தயாநிதி மாறன் மத்திய சென்னை தொகுதியில் களமிறங்கினார். ஆனால் இந்த முறை தமிழகம் முழுவதும் ஜெயலலிதா அலை வீசியது. அ.தி.மு.க 39ல் 37 தொகுதிகளை கைப்பற்றியது. இந்தத் தேர்தலில் தான் அ.தி.மு.க முதன்முறையாக மத்திய சென்னை தொகுதியில் வென்றது.

2019 தேர்தலில் தொகுதி மீண்டும் தி.மு.க வசம் வந்தது. இந்தத் தேர்தலில் தி.மு.க சார்பில் மீண்டும் தயாநிதி மாறன் களமிறங்கினார். அ.தி.மு.க கூட்டணியில் தொகுதி பா.ம.க.,வுக்கு ஒதுக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் தி.மு.க கூட்டணிக்கு சாதகமாக இருந்தநிலையில், சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தயாநிதி மாறன் வென்றார்.

தி.மு.க கூட்டணியில் மீண்டும் திமுகவே களமிறங்கும். மத்திய சென்னை தொகுதி சுமார் 30 ஆண்டுகளாக மாறன் குடும்பத்தின் கோட்டையாகவே இருந்து வருகிறது, எனவே இந்தத் தேர்தலிலும் மீண்டும் தயாநிதி மாறனே களமிறங்குவார் என்று கூறப்படுகிறது.

மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில், சென்னையின் முக்கிய இரண்டு ரயில் நிலையங்களான சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்கள் இடையேயான ரயில் பாதை இணைப்பு கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது.

இந்த தொகுதியில் சென்னையின் மிக முக்கிய பகுதிகள் இடம்பெற்றிருப்பதால் இங்கு அதிக போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகின்றன. இங்கு இருக்கும் மக்கள் தொடர்ந்து போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரி வருகின்றனர்.

சேப்பாக்கம், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடும் நிலவி வருகிறது.

Tags

Next Story
திருவண்ணாமலை தீப திருவிழா.. நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை..!