அந்தமான் புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப கோளாறால் ரத்து
சென்னை விமான நிலையம்
சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம், இன்று அதிகாலை 5 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த 146 பயணிகள், அதிகாலை 4 மணிக்கு முன்னதாகவே, சென்னை விமான நிலையத்துக்கு வந்து, பாதுகாப்பு சோதனை உட்பட அனைத்து சோதனைகளையும் முடித்து விட்டு விமானத்தில் ஏற தயாராக இருந்தனர்.
இந்நிலையில், விமானத்தில் பயணிகளை ஏற்றுவதற்கு முன்னதாக விமானி, விமானத்தில் இயந்திரங்களை சரி பார்த்தார். அப்போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை அறிந்து, பயணிகளை விமானத்தில் ஏற்றாமல், விமானம் தாமதமாக காலை 8 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. என்ஜினீயர்கள் விமானத்திற்குள் ஏறி, தொழில்நுட்பக் கோளாறை சரி செய்ய முயன்றனர். ஆனால் விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு சரி செய்ய முடியவில்லை. இதை அடுத்து விமானம் இன்று ரத்து என்று அறிவிக்கப்பட்டது.
இதனால் பயணிகள் ஆத்திரமடைந்து, ஏர் இந்தியா விமான நிறுவன கவுண்டரை சூழ்ந்து கொண்டு ஆவேசமாக வாக்குவாதங்களில் ஈடுபட்டனர். அதிகாலை 4 மணிக்கு முன்னதாகவே வந்து காத்திருக்கிறோம், இவ்வளவு நேரம் தாமதம் என்று கூறிவிட்டு, இப்போது திடீரென ரத்து என்று கூறுகிறீர்களே? இதை அப்போதே கூறியிருந்தால், நாங்கள் வேறு விமானத்தில் சென்று இருப்போமே என்று அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.
இதையடுத்து பயணிகளை விமான நிலைய அதிகாரிகளும், பாதுகாப்பு படையினரும் சமாதானம் செய்தனர். விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருக்கும்போது, விமானத்தை இயக்குவது பாதுகாப்பானது இல்லை. உங்களுடைய நலன் கருதி தான் விமானத்தை ரத்து செய்து இருக்கிறோம். நாளை காலை விமானம் புறப்பட்டு செல்லும். விருப்பப்பட்டவர்கள் நாளை பயணியுங்கள். மற்றவர்கள் டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தனர். இதனால் பயணிகள் வேறு வழியின்றி அமைதி அடைந்தனர். சிலர் தங்களுடைய விமான டிக்கெட்டை வேறு விமானத்திற்கு மாற்றி பயணம் செய்கின்றனர்.
இதற்கிடையே சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, லண்டன் செல்ல வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் 6 மணி நேரம் தாமதமானதால், 328 பயணிகள், சென்னை விமான நிலையத்தில் அவதி அடைந்துள்ளனர்.
லண்டனில் இருந்து சென்னை வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், இன்று அதிகாலை 3:30 மணிக்கு, சென்னை வந்துவிட்டு மீண்டும், காலை 5:30 மணிக்கு, சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு செல்லும். அந்த விமானத்தில் இன்று சென்னையில் இருந்து 328 பயணிகள் லண்டன் செல்ல இருந்தனர்.
ஆனால் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் தொழில் நுட்ப கோளாறு காரணமாக, லண்டனிலிருந்து தாமதமாக புறப்பட்டு, இன்று காலை 10 மணிக்கு மேல் தான் சென்னை வந்தது. எனவே சென்னையிலிருந்து அதிகாலை 5:30 மணிக்கு லண்டன் செல்ல வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், இன்று 6 மணி நேரம் தாமதமாக, காலை 11:20 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் லண்டன் செல்ல வேண்டிய 328 பயணிகள் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu