முட்டுக்காடு படகு குழாமில் படகு சவாரி நிறுத்தம், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

முட்டுக்காடு படகு குழாமில் படகு சவாரி நிறுத்தம், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

முட்டுக்காடு படகு குழாம் - கோப்புப்படம் 

மோட்டார் படகுகள் மற்றும் மோட்டார் ஸ்கூட்டர்கள் ஆகியவற்றை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் ஆர்வமாக வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு பகுதியில் தமிழக அரசின் சுற்றுலாத்துறைக்கு சொந்தமான படகு குழாம் உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் விடுமுறையின் போது குடும்பத்துடன் முட்டுக்காடு படகு குழாமுக்கு வந்து படகு சவாரி செய்வது வழக்கம்.

குறிப்பாக பெண்கள், குழந்தைகளுடன் வரும் சுற்றுலா பயணிகள் முட்டுக்காடு படகு குழாமில் உள்ள மோட்டார் படகுகள், கால்களால் இயக்கக்கூடிய மிதி படகுகள், நீரில் பாய்ந்து செல்லக்கூடிய மோட்டார் ஸ்கூட்டர்கள் ஆகியவற்றை பயன்படுத்தி சவாரி செய்து மகிழ்வார்கள்.

இந் நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த மிச்சாங் புயல் மழையின் காரணமாக பருவநிலையில் பெரும் மாற்றம் காணப்படுகிறது. இதனால் எப்போதும் நீர் நிறைந்து காணப்படும் முட்டுக்காடு முகத்துவார பகுதி தற்போது நீர் வற்றி ஆங்காங்கே மணல் திட்டுகளாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக இங்கு தற்போது மோட்டார் படகுகள் மற்றும் மோட்டார் ஸ்கூட்டர்கள் ஆகியவற்றை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து முட்டுக்காடு படகு குழாமில் படகுகளில் பயணிக்க ஆர்வமாக வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:- மிச்சாங் புயல் போன்ற இயற்கை சீற்றத்தின் காரணமாகபருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டு முட்டுக்காடு முகத்துவாரத்தில் தண்ணீர் வற்றி உள்ளது. ஓரிரு நாட்களுக்கு இந்த நிலை நீடிக்கலாம். இதன் காரணமாக மோட்டார் படகுகளை இயக்க முடியவில்லை. பொதுமக்களின் வசதிக்காக மிதி படகுகள் மட்டும் இயக்கப்படுகின்றன. இதனால் ஒரு சிலர் மட்டுமே அந்த மிதி படகுகளை பயன்படுத்தி சவாரி சென்றனர். மற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள் என தெரிவித்தனர்

Tags

Read MoreRead Less
Next Story