காலாவதியான உணவு பொருட்கள் கல்யாண மண்டபத்தில் வைத்து விற்பனை

காலாவதியான உணவு பொருட்கள் கல்யாண மண்டபத்தில் வைத்து விற்பனை
X

காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை மேற்கொள்கிறார்கள்

காலாவதியான உணவு பொருட்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்து வந்த கல்யாண மண்டபத்திற்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்

செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர் கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை கணேஷ் நகர் சாலையில் எஸ்.எம் மஹால்.செயல்பட்டு வருகிறது. இங்கு பல பிரபலமான நிறுவனங்களின் பிஸ்கட், சாக்லேட், சிப்ஸ் மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்டவை அதன் அசல் விலையைவிட மலிவான விலையில் விற்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக வணிகர்கள் சார்பில், காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அனுராதா தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் இன்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, சம்பந்தப்பட்ட கல்யாண மண்டபத்தின் உரிமையாளர் செந்தில் என்பவர் காலாவதியான பொருட்களை வாங்கி வந்து தனது மண்டபத்தின் ஒரு பகுதியில் வைத்து எந்தவித அங்கீகாரமும் இன்றி மினி சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்ததும், அனைத்து பொருட்களையும் பாதி விலைக்கு விற்றுள்ளதால் அப்பகுதியில் அமோகமாக விற்பனை நடைபெற்று வந்தது தெரியவந்தது.

மேலும் கல்யாண மண்டபத்தின் மற்றோரு பகுதியில் அதிகாரிகள் சோதனை செய்தபோது 2.5 லட்ச ரூபாய் மதிப்பிலான 3.5 டன் எடையுள்ள காலாவதியான உணவு மற்றும் மளிகை பொருட்கள் இருப்பதை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உறுதி செய்து, சம்பந்தப்பட்ட கல்யாண மண்டபத்திற்க்கு சீல் வைத்தனர். மேலும் கல்யாண மண்டபத்தின் உரிமையாளர் செந்தில் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!