கோயிலுக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலத்தை மீட்டுத்தர மக்கள் கோரிக்கை

கோயிலுக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலத்தை மீட்டுத்தர மக்கள் கோரிக்கை
X

வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய கோவிலுக்கு சொந்தமான இடம்

கேளம்பாக்கம் பகுதியில் கோயிலுக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலத்தை மீட்டுத்தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அடுத்த ஏகாட்டூர் ஊராட்சி வாணியம்சாவடி பகுதியில் கோவிலுக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள தனி நபரிடமிருந்து மீட்டுத்தர கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அடுத்த ஏகாட்டூர் ஊராட்சி வாணியம்சாவடி பகுதியில் கோவில் பகுதியில், முற்காலத்தில் வெளியூரில் இருந்து வியாபாரம் செய்வதற்காக வருபவர்கள் அப்பகுதியில் இருந்த மண்டபத்தில் தங்கி வாணிபம் செய்து செல்வர். இதனால் அப்பகுதிக்கு வாணியம்சாவடி என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

அப்படி வாணிபம் செய்வதற்காக வந்த ஒரு குடும்பம், அங்குள்ள கோவிலில் தங்கி கோவில் பணிகளை செய்து வர கிராமத்து மக்களிடம் கேட்டுக்கொண்டதன் பேரில் கிராம மக்களும் அவர்களை கோவில் பணிகளை செய்ய அனுமதித்து வந்தனர்.

நாளடைவில் கோவில் பணிகளை செய்து வந்த அந்த குடும்பம், தற்போது அந்த கோவிலுக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து அதில் ஒரு பகுதியை அதே குடும்பத்தை சேர்ந்த நபர்கள் மீது தான செட்டில்மென்ட் செய்து அனுபவித்து வருவதாக கூறப்படுகிறது. மீதம் உள்ள நிலத்தை அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை வாகனங்கள் நிறுத்துவதற்கு இடங்களை கொடுத்தும், தரை வாடகை விட்டும் சம்பாதித்து வருகின்றனர்.

அப்படி வரும் பணத்தை கோவில் காரியங்களுக்காக செலவு செய்யாமல் அவர்களின் தனிப்பட்ட சொந்த காரியங்களுக்கு செலவு செய்து வருவதை அறிந்த அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் இதுகுறித்து அவர்களிடம் பல முறை கேட்ட பொழுது அவர்கள் சரியான பதில் சொல்லவில்லை. மேலும் அவர்கள் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால், அதனை பயன்படுத்தி அடியாட்களை வைத்து மிரட்டுவதும் காவல்துறையினரை ஏவி அவர்கள் மீது பொய் வழக்குகளை பதிவு செய்து மிரட்டி வருவதாக தெரிவித்தனர்.

இச்செயலை தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலைத்துறை தலையிட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலத்தை மீட்டு அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்