கேளம்பாக்கம்: பாலியல் புகார்; சிவசங்கர் பாபாவை விசாரிக்க உத்தரகாண்ட் விரைந்தது தனிப்படை!
சிவசங்கர் பாபா
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கம் பகுதியில் அசுசில் ஹரி தனியார் உண்டு உறைவிட பள்ளி. இந்த பள்ளியின் நிறுவனா் சிவசங்கா்பாபா.இந்த பள்ளியின் முன்னாள் மாணவி ஒருவா் இணையத்தில் தனக்கு அந்த பள்ளியில் பாலியல் சீண்டல்கள் நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு குழந்தைகள் நல உரிமைகள், பாதுகாப்பு அதிகாரி சரஸ்வதி ரங்கசாமி தலைமையில் நான்கு பேர் கொண்ட குழுவினர் பள்ளியில் கடந்த ௧ம் தேதி ஆய்வு மேற்கொண்டு சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர்.
அப்போது அங்கு சிவசங்கா்பாபா இல்லை. இதனால் அங்கிருந்த ஊழியா்கள், நிா்வாகிகள், ஆசிரியைகளிடம் விசாரணை மேற்கொண்டனா். அதோடு சிவசங்கா்பாபா, பள்ளி முதலவா்,தலைமை ஆசிரியை இம்மாதம் 11 ஆம் தேதி,சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மனும் கொடுத்தனா்.
அதன்படி 11 ஆம் தேதி பள்ளி முதல்வா், தலைமை ஆசிரியை விசாரணைக்கு ஆஜராகினா். ஆனால் சிவசங்கா்பாபா ஆஜராகவில்லை. அவா் உடல்நலம் பாதிக்கப்பட்டு, உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாக அவா் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிவசங்கா்பாபாவிற்கு மற்றொரு தேதியில் ஆஜராக கோரி புது சம்மன் அனுப்பப்படும் என்று கூறப்பட்டது.
இதற்கிடையே செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் தனிப்படையினரும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். முன்னாள் மாணவி உட்பட 3 மாணவிகள் ஆன்லைன் மூலம் போலீசுக்கு புகாா் அளித்தனா். இதையடுத்து புகாா் அளித்த மாணவிகளிடம் மாமல்லபுரம் அனைத்து மகளீா் காவல்நிலைய போலீசாா் ரகசிய விசாரணையை மேற்கொண்டனா். அதோடு தனிப்படை போலீசாா் இந்த புகாா்கள் சம்பந்தமான ஆதாரங்களையும் சேகரித்தனா். மேலும் இதில் சிவசங்கா்பாபாவுக்கு ஆதரவாக செயல்பட்டவா்கள் யாரெல்லாம் என்ற விபரங்களையும் சேகரித்தனா். அதோடு சட்ட வல்லுனா்களின் ஆலோசனைகளையும் கேட்டனா்.
இதையடுத்து மாமல்லபுரம் அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம், காஞ்சிபுரம் போலீஸ் டிஐஜி சத்தியப்பிரியா நேரடியாக ரகசிய விசாரணை மேற்கொண்டாா். இதையடுத்து சிவசங்கா்பாபா மீது, போக்சோ மற்றும் மிரட்டுதல், ஆசைவாா்த்தை கூறி ஏமாற்றுதல், கற்பழிப்பு உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனா். அதோடு தனிப்படை போலீசாா் சிவசங்கா்பாபாவை கைது செய்து தமிழகம் அழைத்துவர நடவடிக்கை மேற்கொண்டனா்.
இந்நிலையில் போலீஸ் டிஜிபி திரிபாதி , சிவசங்கா்பாபா வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து சிவசங்கர்பாபா உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சு வலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலை அடுத்து, தனிப்படையினர் உத்தரகாண்ட் மாநிலம் டோராடூனில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். மேலும் அவரை கைது செய்து தமிழகம் அழைத்துவரவும் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu