கட்டுமான பொருட்கள் விற்பனையாளர் கடத்தல் வழக்கு : 5 பேர் கைது

கட்டுமான பொருட்கள் விற்பனையாளர் கடத்தல் வழக்கு : 5 பேர் கைது
X

கட்டிட பொருட்கள் விற்பானையாளரை கடத்தியதாக கைது செய்யப்பட்டவர்கள். 

மாமல்லபுரம் அருகே கட்டுமான பொருட்கள் விற்பனையாளரை காரில் கடத்தி 5 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது36), அங்குள்ள மாமல்லபுரம் திருக்கழுக்குன்றம் சாலையில் கட்டுமான பொருட்கள் விற்பனை கடை வைத்துள்ளார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது செல்போனில் மறு முனையில் பேசிய நபர் ஒருவர், மாமல்லபுரம் அடுத்த வெண்புருஷம் சுடுகாட்டில் உறவினர் ஒருவருக்கு தாங்கள் கல்லறை கட்ட இருப்பதாகவும் அதற்கு ஜல்லி, எம்.சாண்ட் மணல் வேண்டும் என்று கூறியுள்ளார்.

பிறகு எதிர் முனையில் பேசிய நபரின் வார்த்தையை நம்பிய ஆனந்தன் செல்போனில் பேசிய நபர் சொன்ன இடத்தில் ஜல்லி, எம்சாண்ட் மணலை இறக்கி விட்டு அதற்குண்டான பணம் கேட்ட போது அங்கிருந்த நபர் ஏ.டிஎம்.மில் எடுத்து தருவதாக கூறி தான் எடுத்து வந்த ஒரு வெள்ளை நிற காரில் அவரை (ஆனந்தன்) கிழக்கு கடற்கரை சாலை வழியாக 5 பேர் கொண்ட கும்பலை சேர்ந்தவர்கள் வலுக்கட்டாயமாக அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது ஆனந்தன் என்னை எங்கு அழைத்து செல்கிறீர்கள் என கேட்டபோது காரில் இருந்த 5 நபர்களும் அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி உன்னை கடத்தி வந்துள்ளோம் என்றும், உன்னை உயிருடன் விடுவிக்க வேண்டும் என்றால் உன் மனைவியை நாங்கள் சொல்கின்ற இடத்திற்கு ரூ.5 லட்சம் பணத்துடன் வரச் சொல் என்று கூறி அவரது மனைவியிடம் போனில் பேச வைத்துள்ளனர்.

பிறகு தனது கணவர் போன் மூலம் சொன்ன தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆனந்தனின் மனைவி நித்தியா (30) கடைக்கு அருகில் கற்சிலை வடிக்கும் வேலை செய்யும் கராத்தே சரவணன் (வயது40) என்பவர் வலியச்சென்று கடத்தப்பட்ட உங்கள் கணவரை மீட்க நான் உதவியாக இருப்பேன் என்று ஆறுதல் கூறுகிறார்.

நித்யா கராத்தே சரவணனுடன் தனது கணவரை மீட்க வாயலூர் பாலாற்று பாலம் அருகில் சென்று அங்குள்ள ஒரு மறைவான இடத்தில் முதல் கட்டமாக கடத்தல் ஆசாமிகள் கேட்ட ரூ.5 லட்சத்தில் 2 லட்ச ரூபாய் பணம் கொடுக்கிறார். இப்பணம் பத்தாது என்று கூறிய கடத்தல் கும்பல் நித்தியாவின் கழுத்தில் அணிந்திருந்த 1 சவரன் தங்க செயினையும் பறித்து கொண்டு ஆனந்தனை அவரது மனைவியிடம் ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து காரில் தப்பி ஓடிவிட்டனர்.

பின்னர் கடத்தல் கும்பலால் விடுவிக்கப்பட்ட ஆனந்தன் தன் மனைவியுடன் வந்து மாமல்லபுரம் காவல் நிலையத்தில் தன்னை கடத்தி சென்று ரூ.2 லட்சம் பணம், 1 சவரன் தங்க சங்கிலி ஆகியவற்றை பறித்து சென்ற மர்ம கும்பல் குறித்து புகார் செய்தார்.

அப்போது அவர்களுக்கு உதவி செய்வதுபோல் உடன் வந்திருந்த கராத்தே சரவணன் தன்னுடைய பெயரை புகாரில் சாட்சியாக போட வேண்டாம் என்றும், தனக்கு இதனால் ஏதாவது பிரச்சனை ஏற்படும் என்றும் ஆனந்தனிடம் கூறியுள்ளார். பிறகு மாமல்லபுரம் டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் கடத்தல் கும்பல் பற்றி விசாரித்து வந்தனர்.

இதற்கிடையில் ஆனந்தன் குடும்பத்திற்கு உதவி செய்வதுபோல் நடித்து வந்த கராத்தே சரவணனின் நடத்தையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்படவே அவரது செல்போனை கண்காணித்தனர். அப்போது கடத்தல் கும்பலுடன் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

பிறகு போலீசார் கராத்தே சரவணனை அழைத்து தீவரமாக விசாரித்தபோது, ஆனந்தனை கடத்த முழு திட்டம் போட்டதும், நித்தியாவிடம் அவரது கணவரை மீட்க உதவி செய்வது போல் நடித்து நாடகமாடியதும் விசாரணையில் தெரிய வந்தது.

பிறகு கராத்தே சரவணனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மாமல்லபுரம் அருகில் பல்வேறு இடங்களில் பதுங்கி இருந்த கடத்தல் கும்பலை சேர்ந்த மணிமங்கலம் மூர்த்தி (வயது40), ஆலிகுப்பம் விஜயகுமார் (வயது39), செம்மஞ்சேரி அர்ஜூன் (வயது35), சென்னை மயிலையை சேர்ந்த ரஞ்சித்குமார் (38), மகேந்திரன் (40) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கடத்தலுக்கு திட்டம் போட்டு கொடுத்த கராத்தே சரவணன் வடக்கு மாமல்லபுரம், பகுதியை சேர்ந்தவர் ஆவார். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், கடத்தல் கும்பலிடம் இருந்து 3 கத்தி ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட கராத்தே சரவணன் உள்ளிட்ட 6 பேரும் திருக்கழுக்குன்றம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags

Next Story
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: ஈரோட்டில் 170 பேர் கைது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்