யூரோலைப் தொழிலாளர் பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் தலையிட வேண்டும்: சிஐடியு ஆர்ப்பாட்டம்

யூரோ லைப் தொழிற்சாலையில் சம்பள பாக்கி உள்ளிட்ட பிரச்சணையில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட வலியுறுத்தி சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம் ஆலத்தூர் தொழிற்பேட்டையில் யூரோலைப் என்ற மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகின்றது. இந்நிறுவனத்தில் 20 நிரந்தர தொழிலாளர்கள், 70 தற்காலிக தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர்.
இந்நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கடந்த ஏப்ரல், மே மாதத்தில் சம்பளம் வழங்கப்படவில்லை, கடந்த மூன்று ஆண்டுகளாக சட்டப்படியான போனஸ் தொகை வழங்கப்படவில்லை, இதனால் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 4 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படாமல் இருப்பதுடன் 14 மாதங்களாக தொழிலாளர் வைப்பு பணம் மற்றும் இஎஸ்ஐ க்கு செலுத்த வேண்டிய தொகையையும் தொழிற்சாலை நிர்வாகம் செலுத்தாமல் சட்டவிரோதமாகவும், தொழிலாளர் விரோத போக்கையும் கடைபிடித்து வருகின்றது.
இந்நிலையில் கடந்த மாதம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் சிஐடியுடன் இணைந்து குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்துமுறையிட்டனர். இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் தொழிலாளர் துறை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சிணையில் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி சிஐடியு சார்பில் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் மாவட்டத் தலைவர் கே.சேஷாத்திரி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்ட செயலாளர் க.பகத்சிங்தாஸ், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு கன்வீனர் கலைச்செல்வி, மாவட்டக்குழு உறுப்பினர் யோபுராஜ், விதொச மாவட்ட செயலாளர் பி.சண்முகம் உள்ளிட்ட பலர் பேசினர். யூரோலைப் தொழிலாளர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu