திருக்கழுக்குன்றத்தில் ஊர்க்காவல் படை வீரர் தற்கொலை.. உடலை பிரீசரில் வைத்தபோது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி..

திருக்கழுக்குன்றத்தில் ஊர்க்காவல் படை வீரர் தற்கொலை.. உடலை பிரீசரில் வைத்தபோது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி..
X

தற்கொலை செய்து கொண்ட ஊர்க்காவல் படை வீரர் ராபின்.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் ஊர்க்காவல் படை வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது உடலை குளிர்சாதன பெட்டியில் வைக்கும் போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலியானார்.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருகேயுள்ள கொத்திமங்கலம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் ராபின் (வயது 27). இவர், ஊர்காவல் படை வீரராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் மன அழுத்தம் காரணமாக இன்று அதிகாலை அவர் தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

இதுகுறித்து அவரது பெற்றோர் திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த திருக்கழுக்குன்றம் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

மின்சாரம் பாய்ந்து ஒருவர் சாவு:

இதற்கிடையே, பிரேதப் பரிசோனைக்குப் பிறகு ராபனின் உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இருந்து அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ராபினின் சடலத்தை அவரது வீட்டிற்கு எடுத்துச் சென்று உறவினர்கள் மரியாதை செலுத்தினர்.

அப்போது, ராபினின் உடலை அங்கு தயாராக இருந்த குளிர்சாதன பெட்டிக்கு மாற்றினர். அந்தப் பெட்டிக்கு மின் இணைப்பு கொடுக்கும் போது அதில் ஏற்பட்ட மின்சார கசிவு காரணமாக திடீரென மின்சாரம் தாக்கியில் அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் மற்றும் அவருக்கு உதவி செய்த ராஜா என்பவர் தூக்கி வீசப்பட்டனர்.

அதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அவர்களை உடனடியாக மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவர்கள் இருவரையும் பரிசோதித்தில் ராமச்சந்திரன் இறந்து போனது தெரியவந்தது.

ராஜா உயிருக்கு ஆபத்தான நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக மழை பெய்த நிலையில் ராபின் வீட்டில் உள்ள மின்சார கசிவா அல்லது ப்ரீசர் பார் பாக்சில் ஏற்பட்ட மின் கோளாறா என்பது குறித்து தற்போது காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மழைக் காலங்களில் மின்சாரத்தை கையாளுவது குறித்து பல விழிப்புணர்வுகள் அளித்தாலும், இது போன்ற சமயங்களில் பதட்டம் மற்றும் சோகத்தில் கவனிக்க மறந்து மேலும் துயரங்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!