மண் சோறு சாப்பிடும் கீரப்பாக்கம் மக்கள். கண்டுகொள்ளாத அதிகாரிகள்

மண் சோறு சாப்பிடும் கீரப்பாக்கம் மக்கள். கண்டுகொள்ளாத அதிகாரிகள்
X
சாலையில் புழுதி பறப்பதால் மண் சோறு சாப்பிடும் அவல நிலையில் கீரப்பாக்கம் மக்கள். கண்டுகொள்ளாத அதிகாரிகளால் வேதனை

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீரப்பாக்கம் ஊராட்சியில், கீரப்பாக்கம் முருகமங்கலம் அருங்கால் ஆகிய கிராமங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் காட்டாங்கொளத்தூர் யூனியனுக்கு சொந்தமான கீரப்பாக்கம் நான்கு ரோடு முதல் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி வரை ஒரு கிலோ மீட்டர் கொண்ட பிரதான சாலை உள்ளது. இந்த சாலையை 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மாநகர பேருந்துகள், அரசு பேருந்துகள், கனரக வாகனங்கள் என தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்றுவரும் அந்த சாலை பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனை சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுகுறித்து கீரப்பாக்கம் கிராம மக்கள் கூறுகையில், இந்த சாலையில் ராட்சத கனரக வாகனங்களில் அதிக பாரம் கொண்ட கனிமங்களை ஏற்றி செல்வதால் சாலை குண்டும் குழியுமாக காட்சியளித்து வருகிறது. மேலும் அதிவேகமாக லாரிகள் செல்வதால் புழுதி பறக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் சாலையில் நடமாட முடியவில்லை. மேலும் சாலையில் பறக்கும் புழுதி சாலையோரத்தில் உள்ள அனைத்து வீடுகள் மீதும் படிவதால் துணி காய வைக்கவும் முடியவில்லை.

சாப்பிடும்போது புழுதி வந்து விழுவதால் மண் சோறு சாப்பிடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பல ஆண்டுகளுக்கு முன்பு தரமற்ற முறையில் போடப்பட்ட தார் சாலை போடப்பட்ட சில நாட்களிலேயே பெயர்ந்துவிட்டது. இந்த சாலையை சீரமைக்க கோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் பலமுறை புகார் கூறியும் கண்டுகொள்ளவில்லை. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தலையிட்டு சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!