புராதன சின்னங்களை பார்வையிட நேரம் நீட்டிப்பு
மாமல்லபுரம் புராதன சின்னங்களை பார்வையிட நேற்று முதல் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் அதனை கண்டுகளிக்க ஏராளமான பொதுமக்கள் குவிந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட ஏராளமான பல்லவர் காலத்து புராதன சின்னங்கள் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய நினைவு சின்னங்களாக திகழ்கிறது. இந்த பாரம்பரிய புராதன சின்னங்களை கண்டுகளிக்க தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால் மாமல்லபுரம் புராதன சின்னங்களை பொதுமக்கள் பார்வையிட கடந்த 9 மாதங்களாக தடை விதிக்கப்பட்டு இருந்தன. கடந்த டிசம்பர் மாதம் முதல் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்கள் மீண்டும் திறக்கப்பட்டு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.இதில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்தநிலையில் தற்போது பார்வையாளர்கள் நேரம் நீட்டிக்கப்பட்டு, நேற்றிலிருந்து காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை என பயணிகள் கூடுதலாக 2 மணி நேரம் புராதன சின்னங்களை கண்டுகளிக்கலாம். பார்வையாளர் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் புராதன சின்னங்களை பார்வையிட குவிந்தனர்.
இதனால் வியாபாரிகளுக்கும் இன்று காலை முதல் வியாபாரம் களைகட்டி வருவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் புராதன சின்னங்களை கண்டுகளிக்க வருவோர் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருக்கவேண்டும், கையுறைகளை அணிந்திருக்கவேண்டும் என மாமல்லபுரம் தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu