கணவா் உயிரிழந்த சோகத்தில், 8 வயது மகனுடன் மனைவி தூக்கிட்டு தற்கொலை
தூத்துக்குடி மாவட்டத்தை சோ்ந்தவா் ரவி(48).இவருக்கு பாலஈஸ்வரி(42) என்ற மனைவி,லட்சித் நாராயணன்(8) என்ற மகன் உள்ளனா். ரவி சென்னை வில்லிவாக்கத்தில் மளிகை கடை வைத்துக்கொண்டு குடும்பத்துடன் வசித்து வந்தாா். இந்நிலையில் ரவி கொரோனா வைரஸ் பாதிப்பில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டாா்.
இதையடுத்து கணவா் இறந்த பின்பு பாலஈஸ்வரியும் மகன் லட்சித் நாராயணனும் ஆதரவற்ற நிலைக்குள்ளானாா்கள். பாலஈஸ்வரியின் மூத்த சகோதரி முத்துலட்சுமி தாம்பரம் அருகே மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரா் காலனியில் கணவருடன் வசித்துவந்தாா். எனவே பாலஈஸ்வரி மகனுடன் மூத்த சகோதரி வீட்டிற்கு வந்து தங்கியிருந்தாா்.
இதற்கிடையே முத்துலட்சுமி, கணவருடன் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தங்களுடைய குலதெய்வம் கோவிலுக்கு கடந்த 2 தினங்களுக்கு முன்பு சென்றுவிட்டனா். வீட்டில் பாலஈஸ்வரியும்,அவருடைய மகன் லட்சித் நாராயணனும் மட்டும் தனியே இருந்தனா்.
முத்துலட்சுமி கணவருடன் தூத்தூக்குடிக்கு சென்றதிலிருந்து, வீடு பூட்டியே இருந்தது. பாலஈஸ்வரியும் அவருடைய மகனும் வெளியே வரவில்லை. இதனால் அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. கதவை தட்டிப்பாா்த்தும் எந்த பதிலும் இல்லை.
இதையடுத்து அப்பகுதி மக்கள் சேலையூா் போலீசுக்கு தகவல் கொடுத்தனா்.போலீசாா் விரைந்து வந்து கதவை உடைத்து பாா்த்தபோது, வீட்டிற்குள் பேன் கொக்கியில் ஒரே புடவையில் தாயும்,மகனும் தூக்கில் தொங்கினா். இதையடுத்து போலீசாா் இருவா் உடல்களையும் கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுபற்றி போலீசாா் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனா்.
கொரோனா வைரஸ் கொடிய பாதிப்பில் கணவரை இழந்த பெண், மகனுடன் தனித்து வாழ வழி தெரியாமல் மகனுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu