வியாபாரியிடம் மாமூல் கேட்டு தாக்கிய பயிற்சி எஸ்.ஐ. பணியிடை நீக்கம்

வியாபாரியிடம் மாமூல் கேட்டு தாக்கிய பயிற்சி எஸ்.ஐ. பணியிடை நீக்கம்
X

பயிற்சி உதவி ஆய்வாளர் மணிவண்ணன். 

தாம்பரம் வியாபாரியிடம் மாமூல் கேட்டு தாக்கிய பயிற்சி எஸ்.ஐ. பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை அடுத்த தாம்பரம் சானிடோரியம், அம்பேத்கர் நகர், பாரதமாதா தெருவைச் சேர்ந்தவர், வெங்கடேஷ்(50), இவர் கிழக்கு தாம்பரம் பாரதமாதா சாலையில் உள்ள விநாயகர் கோவில் அருகில் பூக்கடை நடத்தி வருகிறார்.

இவரது கடை அருகே சேலையூர் காவல் நிலைய புறக்காவல் நிலையம் உள்ளது. கடந்த 19 ம் தேதி அங்குசென்ற சேலையூர் காவல் நிலைய பயிற்சி உதவி ஆய்வாளர் மணிவண்ணன் என்பவர், வெங்கேடசனிடம் மாமூல் கேட்டுள்ளார்.

அவர் தர மறுத்ததால் கடையை அடித்து நொறுக்கி, வெங்கடேசனை தன் இருசக்கர வாகன சாவியில் பொருத்தப்பட்டிருந்த கத்தியை எடுத்து மணிவண்ணன் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த வெங்கடேசன், சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் மணிவண்ணன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் இன்று மணிவண்ணனை பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் கமிஷ்னர் ரவி உத்தரவிட்டுள்ளார்.

சேலையூர் காவல் நிலைய சரகத்தில், தொழில்நிறுவனங்கள், கட்டுமான அதிபர்களிடம், இரவு நேர ரோந்து போலீசார், மிரட்டி தங்கள் வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பவும், வாகனத்தை சரிசெய்ய வேண்டும் என சொல்லி பணம் வாங்குவதும், சாலையோர கடைகளிலும், மாமூல் வசூல் செய்வதும் வாடிக்கையாகி இருந்தது.

இது பற்றி பொது மக்களும் கட்டுமான அதிபர்களும் வெளியே சொல்ல தயங்கிய நிலையில், தற்போது பயிற்சி உதவி ஆய்வாளர் மணிவண்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் இதனை நிரூபித்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!