தாம்பரம்-கூடுவாஞ்சேரி இடையே அமைக்ப்பட்ட 3 புதிய ரயில் பாதையில் சோதனை ஓட்டம்

தாம்பரம்-கூடுவாஞ்சேரி இடையே அமைக்ப்பட்ட 3 புதிய ரயில் பாதையில் சோதனை ஓட்டம்
X

கூடுவாஞ்சேரி-தாம்பரம் இடையே டீசல் இன்ஜினை இயக்கி அதிவேக சோதனை ஓட்டம் நடந்தது.

தாம்பரம்-கூடுவாஞ்சேரி இடையே அமைக்ப்பட்டுள்ள 3 புதிய ரயில் பாதையில் 120 கிமீ அதிவேகத்தில் 8 பெட்டிகளுடன் சோதனை ஓட்டம் நடந்தது.

செங்கல்பட்டு-தாம்பரம் இடையே 30 கி.மீ.தூரத்திற்கு புதிய மூன்றாவது ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இப்பணிகள் 3 பிரிவுகளாக பிரித்து நடக்கிறது. முதல் பிரிவில் செங்கல்பட்டு-சிங்கபெருமாள் கோவில் இடையே நடந்தது. அதில் செங்கல்பட்டு, பரணூா், சிங்கபெருமாள் கோவில் ஆகிய ரயில்நிலையங்கள் அடங்கியுள்ளன. இப்பகுதிகளில் 3 வது ரயில் பாதையமைத்து, மின்மயமாக்குவது,புதிய பிளாட்பாரங்கள் அமைப்பது, ரயில் நிலையங்களை மேம்படுத்துவது போன்ற பணிகள் முடிவடைந்து, சோதனை ஓட்டம் ஏற்கனவே நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து இரண்டாவது கட்டமாக சிங்கபெருமாள் கோவில், மறைமலைநகா், காட்டாங்களத்தூா், பொத்தேரி, கூடுவாஞ்சேரி இடையே 2 ஆம் கட்டப்பணி நடந்தது.அதிலும் பணிகள் நிறைவடைந்து, கடந்த ஆண்டு இறுதியில் சோதனை ஓட்டம் நடந்தது.

இதையடுத்து 3 வது கட்டமாக கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூா், பெருங்களத்தூா், தாம்பரம் ரயில் நிலையங்கள் இடையே 3 வது புதிய ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று முடிவடையும் நிலையில் உள்ளது. இப்பகுதியில் புதிய ரயில் பாதை அமைப்பது, புதிய பிளாட்பாரங்கள் அமைப்பது, ரயில் நிலையங்களை அபிவிருத்தி செய்யும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. ரயில் பாதையை மின்மயமாக்கும் பணியும் முடிவடைந்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு தாம்பரம்-கூடுவாஞ்சேரி இடையே முதலாவதாக டீசல் இஞ்ஜினை முறைப்படி இயக்கி ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினா். 60 கி.மீ, வேகத்திலும், பின்பு 80 கி.மீ வேகத்திலும், இதையடுத்து அதிவேகமாக 100 கி.மீ வேகத்திலும் அந்த டீசல் ரயில் இன்ஜினை இயக்கி ரயில் பாதையின் பாதுகாப்பு தன்மை குறித்து ஆய்வு செய்தனா். அந்த சோதனை ஓட்டம் திருப்த்திகரமாக அமைந்தது. அந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிவடைந்தால், அடுத்ததாக 8 பெட்டிகளுடன் கூடிய சோதனை ரயிலை அதிவேகத்தில் இயக்கி சோதனை ஓட்டத்தை நடத்த ரயில்வே பாதுகாப்பு துறை முடிவு செய்தது.

அதன்படி இன்று காலையிலிருந்து ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் தாம்பரம்-கூடுவாஞ்சேரி இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள 3 வது புதிய அகல ரயில் பாதையில் சோதனை ஓட்டத்தை நடத்தினா். தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையா் அபைய் குமாா் ராய், சென்னை ரயில்வே கோட்ட மேலாளா் கணேசன் உள்ளிட்ட அதிகாரிகள், இன்று காலை மோட்டாா் டிராலிகளில் புதிய 3 ரயில் பாதையில் மிதமான வேகத்தில் சென்று ஆய்வு செய்தனா்.

அதன்பின்பு இன்று பகல் 12.30 மணியளவில் கூடுவாஞ்சேரியிலிருந்து தாம்பரம் வரை புதிதாக அமைக்கப்பட்டுள்ள 3 வது ரயில் பாதையில் 8 பெட்டிகளுடன் ரயில் இன்ஜின் இணைக்கப்பட்ட சோதனை ஓட்ட ரயில் 120 கி.மீ. அதிவேகத்தில் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அந்த சோதனை ஓட்டம் ரயிலில் தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையா் அபைய் குமாா் ராய், சென்னை ரயில்வே கோட்ட மேலாளா் கணேசன் மற்றும் தொழில் நுட்ப வல்லூனா்கள் இருந்தனா். அவா்கள் அதிவேகமாக ரயில் சென்றபோது ஏற்பட்ட அதிா்வுகள் உட்பட பல தொழில்நுட்பங்களை பதிவு செய்தனா். சோதனை ஓட்டம் வெற்றி என்று ரயில்வே பாதுகாப்பு ஆணையா் சான்றிதழ் வழங்கினால், வெகு விரைவில் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள 3 புதிய ரயில் பாதை பயன்பாட்டிற்கு வரும்.

அதன்பின்பு தாம்பரம்-செங்கல்பட்டு-தாம்பரம் இடையே கூடுதலாக புறநகா் மின்சார ரயில்கள் இயக்கப்பட வாய்ப்பு உள்ளது. தற்போது சென்னை பீச்-தாம்பரம்-சென்னை பீச் இடையே நாளொன்றுக்கு 220 மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதில் 56 மின்சா ரயில்கள் மட்டுமே செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூா், அரக்கோணம் வரை இயக்கபடுகின்றன.மற்ற அனைத்து மின்சார ரயில்களும் தாம்பரத்துடன் நிறுத்தப்படுகின்றன. ஆனால் இனிமேல் 3 ரயில்பாதைகள் செயல்பாட்டிற்கு வந்த பின்பு செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூா், அரக்கோணத்திற்கு 100 க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதோடு சென்னை எழும்பூா் மற்றும் தாம்பரத்திலிருந்து தென்மாவட்டங்களுக்கு கூடுதல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!