பொய் கூறுவதற்கான நோபல் பரிசை ஸ்டாலினுக்கு வழங்கலாம் : எடப்பாடி பழனிசாமி பேச்சு

பொய் கூறுவதற்கான  நோபல் பரிசை ஸ்டாலினுக்கு  வழங்கலாம் : எடப்பாடி பழனிசாமி பேச்சு
X

தாம்பரத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக  வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து  பேசிய  முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி .

ஸ்டாலின் காணொளி வாயிலாக பிரசாரம் செய்யும்போது தேர்தல் வாக்குறுதிகளில் 70% வாக்குறுதியை நிறைவேற்றியதாக பொய் பேசுகிறார்

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பொய் சொல்வதற்கான நோபல்பரிசு வழங்கலாம் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் கேம்ப் ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக சார்பில் தாம்பரம் மாநகராட்சியில் போட்டியிடும் 70 பேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசுகையில், தாம்பரம் மாநகராட்சி புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மாநகராட்சி. முதல் வெற்றி அதிமுக வெற்றியாக இருக்க வேண்டும்.கழக நிர்வாகிகள் வெற்றிக்காக உழைக்க வேண்டும், ஒற்றுமை மிகவும் முக்கியம், என சிங்கம் நான்கு எருதுகள் கதையை மேற்கொள் காட்டினார்.

திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். பல்லாவரத்தில் மேம்பாலம், ஈச்சங்காடு பகுதியில் மேம்பாலம், சிட்லபாக்கத்தில் மழை நீர் தேங்காதவாறு 17 கோடி ரூபாய் செலவில் கட்டன் கால்வாய் அமைக்கப்பட்டது. 25 கோடியில் சிட்லபாக்கம் பெரிய ஏரி தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது .

ஏழை எளிய மக்கள் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றால் கட்டணம் ஆகும் என்பதால், அம்மா மினி கிளினிக் கொண்டு வந்தோம். அந்த திட்டத்தை பொறுத்து கொள்ள முடியாமல் ஸ்டாலின் மூடிவிட்டார். அதே போல் அம்மா உணவகத்தையும் படிப்படியாக மூட ஸ்டாலின் திட்டமிட்டிருக்கிறார்.ஸ்டாலினுக்கு மக்களை பற்றிய கவலையே இல்லை, தனது குடும்பத்தை பற்றிய கவலையே உள்ளது.கடந்த 9 மாத கால திமுக ஆட்சியில் ஸ்டாலின் என்ன செய்தார்.

ஸ்டாலின் காணொளி வாயிலாக பிரசாரம் மேற்கொள்ளும் போது தேர்தல் வாக்குறுதிகளில் திமுக 70% வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக பொய் பேசுகிறார். பொய் பேசுவதற்கு நோபல் பரிசு வழங்கலாம் என்றால் ஸ்டாலினுக்கு தான் வழங்க வேண்டும். இந்திய துணை கண்டத்திலேயே அதிக வாக்குறுதிகள் கொடுத்த கட்சி திமுக 525 அறிவிப்புகள் வெளியிட்டது. அதனை செய்யப்போவதில்லை.விளையும் பயில் முளையிலேயே தெரியும். இந்த ஆட்சி சவலை குழந்தை மாதிரி எங்கே எழுந்து நடக்க போகிறது.. ஸ்டாலின் பொம்மை முதலமைச்சர் போல் செயல்படுகிறார்.

அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை ஸ்டாலின் திறந்து வைப்பத்தை குறிப்பிட்டு, நாம் பெற்ற பிள்ளைக்கு ஸ்டாலின் பெயர் வைத்து வருகிறார்.அம்மாவின் அரசு பல கல்லூரிகளை தமிழகத்தில் கொண்டு வந்தது திமுக ஆட்சியில் என்ன திட்டத்தை செய்தார்கள். மக்களை கவர்ச்சிகரமாக பேசி ஏமாற்றுகிறார்கள்.

2021 சட்டமன்ற பொது தேர்தலின் போது உதயநிதி ஸ்டாலின் இந்த ஆட்சியாளர்களுக்கு புத்தி இல்லை, சூடு, சொரணை, வெட்கம், மானம் இல்லை. தனக்கு நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் தெரியும் என்று பேசினார். இப்போது அந்த ரகசியத்தை வைத்து நீட்டை ரத்து செய்யவில்லை. மாறாக ஏன் புலம்பிக்கொண்டிருக்கின்றனர். எவ்வளவு பொய் பிரசாரம் செய்தார்கள். இப்போது உதயநிதியை ஆளையே காணவில்லை..

நீட் என்ற பெயரை கொண்டு வந்தது திமுகவும் காங்கிரசும் தான் அதற்கு ஆதாரம் உள்ளது. குடும்ப தலைவிக்கு 1000 ரூபாய் தருவதாக ஸ்டாலின் கூறினார். அதனை கொடுக்கவில்லை.அதை கேட்டால் இப்போது தான் கணக்கெடுத்து கொண்டிருப்பதாக கூறுகிறார்கள்.தாய்மார்களும் இதை நம்பி ஏமாந்து வாக்களித்தார்கள். இன்று தகுதியானவர்களை பார்த்து கொண்டிருப்பதாக கூறுகிறார்கள் அப்படியா தேர்தல் வாக்குறுதி அளித்தார்கள்.

தை பிறந்தால் வழி பிறக்கும் தமிழரின் சிறந்த பண்டிகை பொங்கல், பரிசாக என்ன கொடுத்தார்கள் வாழ்நாளிலேயே மறக்க முடியாத பரிசை கொடுத்தார்கள்.21 பொருளில் 15ல் இருந்து 18 பொருள் தான் கொடுத்தார்கள் அவையும் தரமற்று, எடை குறைவாகவும், பையும் கொடுக்கவில்லை. பொங்கல் பையில் மட்டும் 60 கோடி கொள்ளையடித்து விட்டார்கள்.

கரும்புக்கு 30ரூபாய் என வாங்குவதாக அறிவித்துவிட்டு 16 ரூபாய் தான் கொடுத்தார்கள் அதிலும் 17 ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டார்கள்.பொங்கல் தொகுப்பில் வண்டுகள் ஓடி விளையாடிக் கொண்டிருக்கிறது, பச்சரிசியில் செல்லெல்லாம் விளையாடுது, வெல்லம் ஒழுகிகிட்டே இருக்கிறது. இப்படி அனைத்து பொருட்களிலும் தரமில்லை.

திருத்தணியில் பொங்கல் தொகுப்பில் புளியில் பல்லி செத்து கிடக்கிறது. இது தொடர்பாக அதை வாங்கியவர் பேட்டி கொடுத்தார். அவர் மீது ஜாமீனில் வெளி வர முடியாத அளவிற்கு வழக்கு பதிவு செய்தனர். இதனால் அவரது மகன் மன தற்கொலை செய்து கொண்டார். பொங்கல் தொகுப்பால் ஒரு உயிர் போனது தான் மிச்சம்.

பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் மக்களின் வயிற்றில் அடித்த கட்சி திமுக, இந்த தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்.தேர்தல் வாக்குறுதிகளை அனைத்தையும் நிறைவேற்றிய கட்சி அதிமுக தான், அதிமுக நாட்டு மக்கள் மீது அக்கறை கொண்ட கட்சி, அதனால் நெஞ்சை நிமிர்த்தி மக்களிடம் வாக்கு கேட்க முடியும். 9 மாத ஆட்சியில் மக்கள் எதிர்ப்பை திமுக சம்பாதித்திருக்கிறார்கள். தாம்பரம் மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டு உரையை முடித்தார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்