வன்முறையைத் தூண்டும் பேச்சு: திமுக எம்பி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்
சென்னை குரோம்பேட்டையில் பாஜக செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் சார்பில் செயற்குழு கூட்டம் கரு.நாகராஜன் தலைமையில் நடைபெற்றது.
பொது வெளியில் வன்முறையைத் தூ்ண்டும் வகையில் திமுக அமைச்சர்களும் திமுக எம்பியும் பேசியது தொடர்பாக டிஜிபி வழக்கு தொடரவேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது..
சென்னை குரோம்பேட்டையில் பாஜக செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் சார்பில் செயற்குழு கூட்டம் கரு.நாகராஜன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் இறுதியில் செய்தியாளர்களிடம் பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் பேசியதாவது: தமிழகத்தில் 66 மாவட்டங்களில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. 2200 மண்டல்களிலும் மாவட்ட செயற்குழுக்கூட்டம் நடைபெற உள்ளது.
பாரதபிரதமர் மனதின் குரல் அனைவராலும் பார்த்து கேட்டு ரசிக்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த பாம்புபிடி வீரருக்கு பத்ம விருது வழங்கியதை பற்றி சொன்னார்கள்.உத்திரமேரூரில் இருக்கும் கல்வெட்டு ஜனநாயக முறைப்படி கிராமசபை எப்படியெல்லாம் நடைபெற வேண்டும் என கல்வெட்டில் இருப்பதை பற்றி பாரத பிரதமர் சொல்லும் போது, ஒவ்வொரு முறையும் தமிழகத்தின் பண்பாட்டு பெருமையை எடுத்து சொல்வதை கடைபிடிப்பது நமக்கெல்லாம் மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறது.
பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். 31ம் தேதி (செவ்வாய்க்கிழமை) கமலாலயத்தில் கூட்டம் நடைபெற உள்ளது. மத்திய அரசு திட்டங்கள் மக்களுக்கு போய் சேருவதில்லை. மாநில அரசு தடையாக இருக்கிறது. ஊழல் நடக்கிறது. போலியான விளம்பரங்கள் மூலம் ஆட்சி நடக்கிறது. மக்கள் மீது அக்கறை காட்டவில்லை.
திமுக தேர்தல் வாக்குறுதிகள் ஒன்றும் செய்யவில்லை, 60 % செய்துவிட்டதாக திமுகவினர் கூறுகிறார்கள். ஆனால் அரசு ஊழியர்கள் செவிலியர்கள், ஆசிரியர்கள் என ஒவ்வொருவரும் திமுக அரசைக் குற்றம் சாட்டி வருகின்றனர். தேர்தலில் வாக்குறுதி அளித்த இவர்களது கோரிக்கைகள் எதையும் ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றவில்லை. அதனால், இந்த ஆட்சிக்கு எதிரான மனநிலையில் அனைத்து தரப்பினரும் இருக்கின்றனர் என்பதே உண்மை.
அமைச்சர்கள் வன்முறையைத் தூண்டும் விதமாக பேசி வருகிறார்கள். இவர்களை மிஞ்சும் வகையில் திமுக எம்பி டி.ஆர்.பாலு கையை வெட்டுவேன், காலை வெட்டுவேன் என பேசுகிறார். அவர் மீது டிஜிபி வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். எப்படி ஒரு எம்பி பொது வெளியில் கையை வெட்டுவேன் என பேசலாம். திமுக அரசின் அராஜகங்களை எல்லாம் தோலுரித்து காட்டுவதற்காக பாஜக தலைவர் அண்ணாமலை கிராமம், கிராமமாக போக உள்ளார்.
இடைத்தேர்தலில் மக்கள் திமுகவிற்கு வாக்களிக்க விரும்பவில்லை. திமுகவிற்கு பாடம் கற்பிக்கும் தேர்தலாக இடைத்தேர்தல் இருக்க வேண்டும் என்பது பாஜகவின் ஆசை. ஆனால் ஆளும் கட்சியினர் அராஜகம் செய்து வெற்றி பெற முயற்சி செய்யலாம்.. ஆனால் அதைஎல்லாம் மீறி ஈரோடு கிழக்கு தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு எதிரான தீர்ப்பை நிச்சயம் மக்கள் தருவார்கள் என்றார் கரு. நாகராஜன்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu