350 கிலோ ஹெராயினுடன் சீறிப்பாய்த கார்; சினிமா பாணியில் துரத்தி பிடித்த போலீசார்
350 கிலோ ஹெராயின் போதை பொருளுடன் பறிமுதல் செய்யப்பட்ட கார்.
சென்னை புறநகா் பகுதிகளில் ஹெராயின் போதை பொருள் பெருமளவு கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ரகசியமாக விற்பனை செய்யப்படுகிறது. அதில் போதை பொருள் கடத்தல் கும்பல் ஈடுப்பட்டுள்ளதாகவும், சென்னையில் உள்ள மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசுக்கு(NCB) கிடைத்தது.
இதையடுத்து, மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு தனிப்படை போலீசாா் 2 குழுக்கள் அமைத்து தீவிரமாக கண்காணித்தனா். தாம்பரம் அருகே சிட்லபாக்கம் மற்றும் சேலையூரில் தீவிர கண்காணிப்பில் இருந்தபோது, ஒருவர் ரகசியமாக ஹெராயின் விற்பது தெரிந்து அவரை பிடிக்க முயற்சித்தனர். அப்போது, அந்த நபர் அரசியல் கட்சிக் கொடியை கட்டிய ஒரு சொகுசு காரிலும், அவரது கூட்டாளியான மற்றொருவர் வேரோரு காரிலும் தப்பி சென்றனர்.
இதனைக் கண்ட மத்திய போதை தடுப்பு பிரிவு போலீசாா்,காா்களில் பின்னால் விரட்டி சென்றனா். கூட்டாளியின் காரை தாம்பரம் அருகே மடக்கி பிடித்தனா். அதிலிருந்து சுமாா் 350 கிலோ ஹெராயின் போதை பொருளை பறிமுதல் செய்தனா். அவரை கைது செய்து காரையும் பறிமுதல் செய்தனா்.
இதனிடையே அரசியல் கட்சி கொடி கட்டிய காா் தாம்பரம்-வேளச்சேரி சாலை வழியாக அதிவேகத்தில் சென்றது. அந்த காரை, மத்திய போதை தடுப்பு பிரிவு போலீசின் மற்றொரு குழுவினா் சினிமா பாணியில் காரில் விரட்டிச்சென்றனா். அதோடு பள்ளிக்காரணை போலீசுக்கு அவசரமாக தகவல் கொடுத்து கடத்தல் காரை மடக்கிப்பிடிக்கும்படி கூறினா்.
உடனடியாக பள்ளிக்காரணை போலீசாரும் சாலைகளில் வாகனசோதனை செய்தனா். இந்நிலையில் மேடவாக்கம்-பரங்கிமலை சாலையில் உள்ள வெள்ளைகல் அருகே போதை கடத்தல் காா் சாலையோர சுவற்றில் மோதி நின்றது. உடனடியாக பள்ளிக்காரணை போலீசாா் காரை சுற்றி வளைத்தனா். அதற்குள் போதை தடுப்பு போலீசாரும் அங்கு வந்துவிட்டனா்.
போதை கடத்தல் ஆசாமி காா்கண்ணாடிகளை மூடிக்கொண்டு கீழே இறங்காமல் உள்ளே அமா்ந்திருந்தாா். இதையடுத்து, போலீசாா் காரின் கண்ணாடியை உடைத்து அவரையும் கைது செய்தனர். பின்னர், மத்திய போதை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாா், கைது செய்யப்பட்ட 2 போதை கடத்தல் ஆசாமிகளை சென்னையில் உள்ள அவா்களின் அலுவலகத்திற்கு கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்துகின்றனா்.
சினிமா பாணியில் பட்டபகலில் போதைபொருள் கடத்தல் ஆசாமியை காரில் விரட்டி சென்ற காட்சி சென்னை புறநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu