மாடம்பாக்கம் கோவில் நிலம் பல ஏக்கர் அபேஸ்! அறநிலையத்துறை காரணமா?
X
ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தேனுபுரீஸ்வரர் கோவில்
By - S.Kumar, Reporter |23 Dec 2021 10:00 AM IST
மாடம்பாக்கத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தேனுபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலம் குறித்த சரியாக தகவல் இல்லை
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட, மாடம்பாக்கத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த, தேனுபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமாக, பக்தர்கள் மற்றும் ஆன்மிக பெரியோர்களால், மாடம்பாக்கம் உட்பட, அதை சுற்றியுள்ள பகுதிகளில், பல ஏக்கர் நிலங்கள் தானமாக வழங்கப்பட்டிருந்தன.
இந்த நிலங்கள், 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை, இப்பகுதி கிராமமாக இருந்தபோது, ஊர் பெரியோர்களால் பாதுகாக்கப்பட்டு வந்தன. அறநிலையத் துறை அதிகாரிகளின் மெத்தனம் மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகளின், தலையீடு ஆகியவற்றால், கடந்த, 20 ஆண்டுகளில் பெரும்பாலான நிலங்கள், தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கு பதில், அரசு நிலங்கள், கோவில் நிலங்களாக மாற்றப்பட்டுள்ளதாகவும், புகார் எழுந்துள்ளது.
இது குறித்து, மாடம்பாக்கத்தைச் சேர்ந்த, சமூக ஆர்வலர், எஸ். ஜெயபால்(59), கூறியதாவது:
கோவிலுக்கு சொந்தமாக,1960 களில் இருந்து பாதுகாக்கப்பட்டு வந்த நிலங்கள் உட்பட, 2019ம் ஆண்டு வரை கோவிலுக்கு சொந்தமாக, எத்தனை ஏக்கர் நிலங்கள் உள்ளன என்பது குறித்து, 2019ல் அறிந்து கொள்ள, முதல் முறையாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பி இருந்தேன்.
அதற்கு, ‛அனுப்பப்பட்ட பதிலில்,1960ம் ஆண்டில் இருந்து, பாதுகாக்கப்பட்ட கோவில் நிலங்களின் விபரங்கள் அடங்கிய, தகவல்கள் எதுவும் தங்களிடம் இல்லை' என, அறநிலையத் துறை பதிலளித்தது. அதேநேரம், 2019ம் ஆண்டில், கோவிலுக்கு சொந்தமாக புஞ்சை, 48.97, நஞ்சை, 38.61 என, மொத்தம், 87.58 ஏக்கர் நிலங்கள் இருப்பதாகவும், இவற்றிற்கு, 2001ம் ஆண்டில் ‛கம்ப்யூட்டர்' பட்டா பெறப்பட்டுள்ளதாகவும், அப்போது தெரிவிக்கப்பட்டது.
இவை, யாரால் கோவிலுக்கு தானமாக எழுதி கொடுக்கப்பட்டது என, 2020ல் இரண்டாவதாக, ஆர்.டி.ஐ.,ல், கேள்வி எழுப்பினேன். அதற்கு, ‛சம்பந்தப்பட்ட நிலங்களுக்குரிய ஆவணங்கள் கோவிலில் இல்லை ; வருவாய்த் துறையின் ஆவணங்கள் வாயிலாக, நிலங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது' என, தெரிவிக்கப்பட்டது.
அந்த பதிலை வைத்து, வருவாய்த் துறையில், விசாரித்தபோது, இந்த, 87.58 ஏக்கர் நிலங்களும், வெவ்வேறு நிலை அரசு புறம்போக்கு நிலங்களாக இருந்து, கோவில் நிலங்களாக மாற்றப்பட்டிருப்பதாக, தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவற்றின் பட்டா தொடர்பான தகவலை, வருவாய்த் துறை இணையதளம் வாயிலாக பார்த்தபோது, 2001 முதல் 2015 வரை, 72.90 ஏக்கர் நிலங்களுக்கு, ‛கம்ப்யூட்டர் பட்டா' கொடுக்கப்பட்டிருப்பது தெரிந்தது ; மீதமுள்ள, 14.68 ஏக்கர் நிலங்களுக்கு பட்டா கொடுக்கப்படவில்லை.
அதாவது, மொத்தமுள்ள, 87.58 ஏக்கர் நிலங்களில், 72.90 ஏக்கர் நிலங்கள் மட்டுமே, கோவிலின் பாதுகாப்பில் இருப்பதும், மீதமுள்ள, 14.68 ஏக்கர் நிலங்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதும், இதன் வாயிலாக தெரிந்தது.
இதையடுத்து, மூன்றாவது, ஆர்.டி.ஐ.,ல் ‛கோவிலுக்கு சொந்தமான 72.90 ஏக்கர் நிலங்களில், எத்தனை ஏக்கர் நிலங்கள் குத்தகைக்கும், வீட்டு மனைகளாக வாடகைக்கும் விடப்பட்டு, அதற்கு, எவ்வளவு வரி வசூலிக்கப்படுகிறது' என, கேள்வி எழுப்பினேன்.
அதற்கு, கோவில் நிலங்கள், 42 பேருக்கு குத்தகைக்கும், 22 பேருக்கு வீட்டு மனைகளாக வாடகைக்கும் விடப்பட்டுள்ளதாக, அவர்களது, பெயர் மற்றும் சர்வே எண்களுடன் கூடிய, விபரம் அடங்கிய பதிலளிக்கப்பட்டது ; ஆனால், எந்த தேதியில், குத்தகை மற்றும் வாடகைக்கு விடப்பட்டது என்ற, விபரமும் அதற்கு, வழங்கப்பட்ட ரசீது விபரமும் அளிக்கப்படவில்லை.
அது குறித்தும், நான்காவது, ஆர்.டி.ஐ.,ல் கேள்வி எழுப்பினேன். அதற்கு, தமிழ்நாடு தகவல் ஆணையம் வரை, மேல் முறையீடு செய்தும், இன்று வரை, பதில் கிடைக்கவில்லை.
இதனால், தற்போது உள்ள, 72.90 ஏக்கர் கோவில் நிலங்களில், எத்தனை ஏக்கர் நிலங்கள், மாயமாகி உள்ளது என, தெரியவில்லை.
இச்சூழலில், கோவில் நிலங்களாக வகைப்படுத்தப்பட்ட, வெவ்வேறு நிலையில் இருந்த, அரசு நிலங்களில், பல ஆண்டுகளுக்கும் மேலாக வசிப்பவர்களிடம், அறநிலையத் துறை அலுவலர்கள் சிலர், போலீஸ் பாதுகாப்புடன், நோட்டீஸ் வழங்கி, மிரட்டி வருகின்றனர். இதில், நோட்டீசுக்கு பயந்து, பணம் கொடுப்பவர்களின், வீடுகள் இடிக்கப்படாததும், கொடுக்காதவர்களின் வீடுகள் இடிக்கப்படுவதும், வாடிக்கையாகி வருகிறது.
ஒட்டுமொத்தமாக, 2 ஆண்டுகளாக ஆர்.டி.ஐ., தகவல்கள் வழியாக, திரட்டப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், 1960ம் ஆண்டுக்கு முன்பிருந்து, 2001க்கு முன்பு வரை, கோவிலுக்கு தானமாக எழுதி கொடுக்கப்பட்ட நிலங்கள், ஆவணங்களின்றி மாயமாகி இருப்பது, தெளிவாகி தெரிகிறது.
அதேநேரம், கோவில் நிர்வாகி ஒருவரும், அறநிலையத் துறை அலுவலர் ஒருவரும் இணைந்து, வருவாய்த் துறையின், ‛அ' பதிவேட்டில், கோவில் நிலம் என, பதிவாகி உள்ள, சர்வே எண்கள்: 612, 613, 615 மற்றும் 627க்குட்பட்ட, பல ஏக்கர் கோவில் நிலங்களை, தங்களது உறவினர்கள் பெயரில், பதிவு செய்து, பட்டா பெற்று வைத்துள்ளனர். கோவில் நிலங்கள் மாயமானது குறித்த, இந்த ‛மெகா' முறைகேடு குறித்து, முதல்வரின் தனிப்பிரிவு, அறநிலையத் துறை கமிஷனர் உட்பட, உயர் அதிகாரிகளுக்கு, புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அரசு தலையிட்டு, முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறினார்.
முரண்பட்ட பதிலால் சிக்கிய அதிகாரிகள்!
நான்காவது முறையாக, பதில் கிடைக்காததால், ஐந்தாவதாக, குத்தகை மற்றும் வாடகைக்கு விடப்பட்ட, சில சர்வே எண்களை வைத்து, அவை, அரசு நிலங்களா அல்லது கோவில் நிலங்களா என, கோவில் நிர்வாகம், வருவாய்த் துறை ஆகியோரிடம், ஜெயபால் கேள்வி எழுப்பி உள்ளார்.
அதற்கு, அளிக்கப்பட்ட பதில், மூன்றாவதாக கேட்கப்பட்ட, ஆர்.டி.ஐ., தகவலுக்கு கிடைத்த பதிலிலிருந்தும், வருவாய்த் துறை அளித்த பதிலிலிருந்தும் முற்றிலும் முரண்பட்டுள்ளது.
அதன் விபரம் அடங்கிய பட்டியல் :
708 சர்வே எண், வீரபத்திரன் என்பவருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் மற்றொரு ஆர்.டி.ஐ.ல் திருக்கோவிலுக்கு சொந்தமான நிலம் இல்லை என தகவல் அளித்துள்ளது. அதே நிலம் வருவாய்த்துறையில் அரசு புறம்போக்கு பெரிய ஏரி நிலம் என உள்ளது.
329 சர்வே எண் ஐயாக்கண்ணு என்பவருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும், மற்றொரு தகவலில் திருக்கோவிலுக்கு சொந்தமான நிலம் இல்லை என்வும் வருவாய்த்துறையில் அரசு புஞ்சை களம் என உள்ளது.
183 சர்வே எண் பார்த்தசாரதி என்பவருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும், மற்றொரு தகவலில் திருக்கோவிலுக்கு சொந்தமான நிலம் இல்லை எனவும், வருவாய்த்துறையில் பட்டா நிலங்களாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்றாவது ஆர்.டி.ஐ.,தகவலில், கோவிலுக்கு சொந்தமான நிலங்கள், தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாக கூறியுள்ள, அறநிலையத் துறை, ஐந்தாவது ஆர்.டி.ஐ., தகவலில், அந்த நிலங்கள், கோவிலுக்கு சொந்தமானவை இல்லை என, தெரிவித்துள்ளது.
இவ்வாறு, ஒரு ஆர்.டி.ஐ., கேள்விக்கும், மற்றொரு ஆர்.டி.ஐ., கேள்விக்கும் முரண்பட்ட பதிலை, அறநிலையத் துறை அதிகாரிகள் அளித்துள்ளதை வைத்தே, கோவிலுக்கு சொந்தமான, பல ஏக்கர் நிலங்கள் மாயமாகி இருப்பது, தெளிவாகிறது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu