வண்டலூர் அருகே 20 ஏக்கர் நிலப்பரப்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே கீரப்பாக்கம் ஊராட்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 20 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள ஆக்கிரமிப்புகளை தாசில்தார் அதிரடியாக அகற்றினார். இதில் தாசில்தாரின் நடவடிக்கையால் கீரப்பாக்கம் ஊராட்சியில் இன்று காலை பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் தாலுகா, காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீரப்பாக்கம் ஊராட்சியில், கீரப்பாக்கம், முருகமங்கலம், அருங்கால் ஆகிய கிராமங்களில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், கீரப்பாக்கத்தில் இருந்து குமிழி செல்லும் சாலையோரத்தில் அரசுக்கு சொந்தமான 100 ஏக்கருக்கு மேல் கல்லாங்குத்து புறம்போக்கு நிலம் உள்ளது. இதனை சிலர் பிளாட் போட்டு விற்று வருவதாக தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு ஆன்லைன் மூலம் புகார் வந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டது.
இதனையடுத்து கீரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றும்படி வண்டலூர் தாசில்தாருக்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம், வருவாய் ஆய்வாளர் ரங்கன், கிராம நிர்வாக அலுவலர் தமிழ்ச்செல்வம் ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட வருவாய்த் துறையினரும், மாமல்லபுரம் டிஎஸ்பி தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசாரும் 3 பொக்லைன் இயந்திரங்களை எடுத்து வந்து ஆக்கிரமிப்பு பிடியில் இருந்த வீடுகள், கடைகள் ஆகியவற்றை இன்று காலை அதிரடியாக அகற்றினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கீரப்பாக்கம் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அரிகிருஷ்ணன், முன்னாள் வார்டு உறுப்பினர் வசந்திகண்ணன் மற்றும் கிராம மக்கள் திரண்டு வந்து வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வீடுகள் மற்றும் கடைகளில் இருக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது முன்னாள் வார்டு உறுப்பினர் வசந்தி கண்ணன் உட்பட உடன்வந்த பெண்கள் தீ குளிப்பதற்காக கையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி னர்.
உடனே போலீசார் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி தடுத்து நிறுத்தினர். பின்னர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினரை போலீசார் ஜீப்பில் ஏற்றி உட்கார வைத்தனர். இதனையடுத்து அவரிடம் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களிடம் தாசில்தார் கூறுகையில், உங்களது பெயரில் வேறு எங்குமே இடம் மற்றும் வீடு இல்லை என்றால் இந்த இடத்தை விட்டு விட்டு செல்கின்றோம் இல்லையென்றால் எடுத்து தரைமட்டமாக்குவோம். மேலும் இதனை யார் தடுத்தாலும் அவர்களை கைது செய்து சிறையில் அடைப்போம் என்று எச்சரித்தார்.
இதனை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்போடு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதில் தாசில்தாரரின் அதிரடி நடவடிக்கையால் கீரப்பாக்கம் ஊராட்சியில் பெரும் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டுள்ளன. மேலும் கடந்த 2013-ம் ஆண்டு தாசில்தார் ஆறுமுகம் வருவாய் ஆய்வாளராக இருந்தபோது மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட கடம்பூர் பகுதியில் 368 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டியிருந்த வீடுகள், கடைகள், வணிக வளாகங்களை அதிரடியாக இடித்து தரைமட்டமாக்கி ஆக்கிரமிப்புகளை அகற்றியது குறிப்பிடத்தக்கதாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu