அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம்
நாளை முதல் முழு ஊரடங்கு அமுல்படுத்தபடும் நிலையில் பெருங்களத்தூர் பஸ்நிலையத்தில் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த 6 ஆம்னி பஸ்களுக்கு போக்குவரத்து அதிகாரிகள் அபராதம் விதித்ததோடு, அதிக பயணிகளை ஏற்றிய உரிய ஆவணம் இல்லாத ஆம்னி பஸ்சை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனா்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்து பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாளை திங்கட்கிழமையிலிருந்து 14 நாட்களுக்கு முழு ஊரடங்கினை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதனையடுத்து வெளியூா்களில் உள்ள தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் ஏராளமான பயணிகள் படையெடுத்து வருகின்றனர். ஆனால் போதிய அரசு பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் பலா் ஆம்னி பஸ்களில் பயணம் செய்கின்றனா். இதனால் ஆம்னி பஸ்களில் கூட்டம் நிறைந்து வழிகிறது. அதை பயன்படுத்திக் கொண்டு ஆம்னி பஸ்களில் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்தனா். இதுபற்றி பயணிகளிடமிருந்து புகாா்கள் வந்ததையடுத்து தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலா்கள் பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் இன்று காலை சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது உரிய ஆவணமின்றியும்,கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளுக்கு மாறாக ஒரே பஸ்சில் 40 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்த ஆம்னி பஸ் ஒன்றை பறிமுதல் செய்தனா்.அந்த பஸ்சில் வந்த பயணிகளை மாற்று பேருந்துகளில் அனுப்பி வைத்தனர்.அதோடு அதிக கட்டணம் வசூலித்த 6 ஆம்னி பஸ்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைத்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu