பெருங்களத்தூர்-செங்கல்பட்டு மேம்பால சாலை அமைக்க ஆலோசனை
செங்கல்பட்டு மாவட்டம் மீனம்பாக்கம் விமான நிலையம் அருகே உள்ள திரிசூலத்தில் இருந்து, செங்கல்பட்டு வரையிலான மேம்பால சாலை திட்டத்தை கைவிடுவது குறித்து, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இதற்கு மாற்றாக, இத்திட்டத்தை தாம்பரம் பெருங்களத்துாரில் இருந்து துவக்க ஆலோசிக்கப்பட உள்ளது.
சென்னையிலிருந்து செங்கல்பட்டு வரை தினந்தோறும் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு காண கிண்டியில் இருந்து விமான நிலையம் வரை, மேம்பால சாலை அமைக்க முதலில் திட்டமிடப்பட்டது. இதற்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டதால், கத்திப்பாரா சந்திப்பிலும், விமான நிலையம் எதிரிலும் பெரிய மேம்பாலங்கள் கட்டப்பட்டன.
இந்நிலையில், தற்போது விமான நிலையத்திலிருந்து செங்கல்பட்டு வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து வெகுவாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து சென்னைக்கு வருவோரும், வெளியில் செல்வோரும் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். இதை கருத்தில் வைத்து, விமான நிலையம் அமைந்துள்ள திரிசூலத்தில் இருந்து செங்கல்பட்டு வரை, 40 கி.மீ., தொலைவுக்கு மேம்பால சாலை அமைக்கும் திட்டத்தை, 2013ல் தமிழக அரசு அறிவித்தது. சி.எம்.டி.ஏ., இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் என அரசு அறிவித்தது.
இதன்படி, சர்வதேச டெண்டர் கோரப்பட்டு, தனியார் கலந்தாலோசனை நிறுவனம் வாயிலாக, இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டது. இத்திட்டத்தை, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வாயிலாக நிறைவேற்ற, சி.எம்.டி.ஏ., பரிந்துரைத்து அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகளையும் துவங்கியது. இருப்பினும், இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் எவ்வித உறுதியையும், சி.எம்.டி.ஏ.,வுக்கு அளிக்கவில்லை.
இது குறித்து, நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:விமான நிலையம் - செங்கல்பட்டு மேம்பால சாலை திட்டத்துக்கு மாற்றாக, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பெருங்களத்துார் முதல் செங்கல்பட்டு வரை, 22 கி.மீ., தொலைவுக்கு, 2,200 கோடி ரூபாயில் மேம்பால சாலை அமைக்கும் திட்டத்தை உத்தேசித்துள்ளது. இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பில், அந்த ஆணையம் ஈடுபட்டுள்ளது. இதனால், சி.எம்.டி.ஏ.,வின் திட்டம், தொடர்ந்து செயல்படுத்தப்படுவது கேள்விக்குறியாகி உள்ளது.
சி.எம்.டி.ஏ., தமிழக நெடுஞ்சாலை துறை, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் ஒன்றாக சந்தித்து பேச்சு நடத்தினால் தான், இதில் இறுதி முடிவு எடுக்க முடியும்.எனவே, சி.எம்.டி.ஏ.,வின் திட்டம் கைவிடப்படுவது குறித்து அதிகாரிகள் நிலையில் பேச்சு நடந்து வருகிறது. தேர்தலுக்கு பின், புதிய அரசு பொறுப்பேற்கும் போது தான், இதில் தெளிவு பிறக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu