செங்கல்பட்டு அருகே பூட்டிய வீட்டில் நகை, பணம், கார் திருட்டு

செங்கல்பட்டு அருகே பூட்டிய வீட்டில் நகை, பணம், கார் திருட்டு
X

செங்கல்பட்டு அருகே பூட்டிய வீட்டில்  மர்ம கொள்ளை

செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூா் அருகே பூட்டிய வீட்டில் நகை, பணம், காரை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அருகே முடிச்சூர் லட்சுமி நகரில் வசித்து வருபவர் கருப்பையா(62). இவருக்கு சொந்த ஊா் ராமநாதபுரம்.அவருடைய தம்பி கோவிந்தன் என்பவர் ராமநாதபுரத்தில் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டாா்.

இதையடுத்து கருப்பையா தம்பியின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக,வீட்டை பூட்டிவிட்டு குடும்பமாக கடந்த 27 ஆம் தேதி சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுவிட்டனர்.

இந்நிலையில் அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை, பக்கத்து வீட்டினா் பார்த்துவிட்டு வீட்டின் உரிமையாளருக்கும், பீர்க்கன்காரணை போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனா்.

மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவில் இருந்த 6 சவரன் தங்க நகை,ரூ.50 ஆயிரம் பணம், 2 வெள்ளி குத்துவிளக்குகள் மற்றும் வீட்டில் உள்ள மின்சாதனப்பொருட்கள் ஆகியவற்றை மூட்டைகட்டி எடுத்துக் கொண்டனர்.

அதன் பின்பு கருப்பையாவின் காா் சாவி வீட்டு மேஜையில் இருந்தது.அதை எடுத்து வீட்டில் நிறுத்தியிருந்த காரையும் திருடிக்கொண்டு சென்றுள்ளனா்.கொள்ளையா்கள் வரும்போது,இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளனா்.அந்த இருசக்கர வாகனத்தை கருப்பையா வீட்டிலேயே விட்டு சென்றிருந்தனா்.

போலீசாா் அந்த இரு சக்கர வாகனத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினா். அது திருட்டு வண்டி என்பது தெரியவந்தது. கருப்பையா 22 சவரன் தங்க நகைகளை வீட்டில் அரிசி மூடைக்குள் மறைத்து வைத்திருந்தாா்.அது கொள்ளையா்களிடம் சிக்கவில்லை.

பீா்க்கன்காரணை போலீசாா் வழக்குப்பதிவு செய்து,கைரேகை நிபுணா்கள் மூலம் ரேகைகளை பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனா்.அதோடு அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!