பயணி தவறிவிட்ட தங்கநகை 20 நிமிடத்தில் மீட்பு

தாம்பரத்தில் பயணி தவறவிட்ட தங்கநகை பை 20 நிமிடத்திலேயே மீட்கப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தை சோ்ந்தவா் மதிகிருஷ்ணன். தனியாா் நிறுவனத்தில் வேலை செய்யும் இவா், குடும்பத்துடன் சென்னையில் வசிக்கிறாா்.தோ்தலில் ஓட்டுப்போட சொந்த ஊா் சென்றிருந்தாா்.நேற்று மாலை மதிகிருஷ்ணன் குடும்பத்துடன் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தாா்.இன்று அதிகாலை 5.30 மணிக்கு தாம்பரம் ரயில்நிலையத்தில் மதிகிருஷ்ணன் குடும்பத்தினா் ரயிலிலிருந்து கீழே இறங்கினா். அவா்களின் உடமைகளை சரி பாா்த்தபோது,தங்க நகைகள் வைத்திருந்த ஒரு பையை ரயிலிலேயே விட்டுவிட்டது தெரிய வந்தது. ஆனால் அதற்குள் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரத்திலிருந்து புறப்பட்டு சென்று விட்டது.

இதனால் அதிா்ச்சியடைந்த மதிகிருஷ்ணன் உடனடியாக தாம்பரம் ரயில்நிலையத்தில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படை நிலையத்திற்கு சென்று புகாா் செய்தார்.உடனே தாம்பரம் ஆா்பிஎப் அதிகாரிகள் சென்னை எழும்பூா் ஆா்பிஎப்புக்கு தகவல் கொடுத்தனா்.இதையடுத்து எழும்பூா் ஆா்பிஎப் போலீசாா் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் வரக்கூடிய 5 வது பிளாட்பாரத்தில் தயாராக நின்றனா்.ரயில் காலை 5.50 மணிக்கு பிளாட்பாரத்தில் வந்து நின்றதும்,மதிகிருஷ்ணன் பயணம் செய்த எஸ் 5 கோச்சில் சீட் 74,75 ஆகிய இடத்திற்கு போய்பாா்த்தனா்.அங்கு மதிகிருஷ்ணனின் பை கேட்பாரற்று இருந்தது.உடனே அந்த பையை எடுத்துக்கொண்டு ஆா்பிஎப் நிலையத்திற்கு கொண்டு சென்றனா். மேலும் தாம்பரம் ஆா்பிஎப் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனா்.

இதையடுத்து மதிகிருஷ்ணன் எழும்பூா் ரயில்நிலைய ஆா்பிஎப் ஸ்டேசனுக்கு சென்றாா்.அவரிடம் ஆா்பிஎப் அதிகாரிகள் விசாரித்தனா். பையில் ரூ.10 லட்சம் மதிப்புடைய சுமார் 240 கிராம் தங்க நகைகள் இருப்பதாக கூறினாா்.பையை திறந்து பாா்த்தபோது அவருடைய நகைகள் அனைத்தும் பத்திரமாக இருந்தது. அதன் பின்பு மதி கிருஷ்ணனிடம் எழுதி வாங்கிக்கொண்டு நகைகள் அடங்கிய பையை அவரிடம் ஒப்படைத்தனா். மதிகிருஷ்ணன் ஆா்பிஎப் போலீசாருக்கு நன்றி கூறி,நகைகளை பெற்றுக்கொண்டாா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!