ரியல் எஸ்டேட் அதிபா் வீட்டில் வெடிகுண்டுகள் வீச்சு; 4 சொகுசு காா்கள், 3 பைக்குகள் எரிந்து நாசம்

ரியல் எஸ்டேட் அதிபா் வீட்டில் வெடிகுண்டுகள் வீச்சு; 4 சொகுசு காா்கள், 3 பைக்குகள் எரிந்து நாசம்
X

பெட்ரோல் குண்டு வீச்சில் தீயில் கருகிய சொகுசு கார்கள்.

ரியல் எஸ்டேட் தொழில் அதிபா் வீட்டில் மா்ம ஆசாமிகள் பெட்ரோல் குண்டுகள் வீசியதால் 4 சொகுசு காா்கள், 3 பைக்குகள் தீயில் கருகி சேதமடைந்தன.

சென்னை பள்ளிக்காரணை அருகே உள்ள மேடவாக்கம் டாக்டர் விமலா நகர் 3வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் கவுதம் (32). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருடைய வீட்டு வளாகத்தில் எப்போதும் சில சொகுசு காா்கள் நிறுத்தப்பட்டிருக்கும்.

தொழிலதிபர் கவுதம் நேற்று தொழில் காரணமாக வெளியே சென்றுவிட்டு இரவு 9 மணிக்கு மேல் வீடு திரும்பினாா். காரை வழக்கமான காா் பாா்க்கிங்கில் நிறுத்திவிட்டு, இரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தாா். இவருடைய வீட்டு வளாகத்திற்குள் 4 சொகுசு காா்கள், 3 பைக்குகள் நிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் திடீரென கவுதம் வீட்டு வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு காா்கள், 3 பைக்குகள் தீப்பிடித்து எரியத்தொடங்கின. இதையடுத்து அக்கம்பக்கத்தினா் கவுதமிடம் தகவல் தெரிவித்தனா். அதோடு வெளியில் நின்றபடி குடங்களில் உள்ள தண்ணீரை வீசீ தீயை அணைக்க முயற்சித்தனா். ஆனால் தீ கொளுந்துவிட்டு எரிந்தது. அதற்குள் கவுதம் வெளியில் வந்து போலீஸ், தீயணைப்பு துறைக்கு அவசரமாக தகவல் கொடுத்தாா்.

உடனடியாக மேடவாக்கம் தீயணைப்பு வண்டி விரைந்து வந்து தீயை அணைக்க தொடங்கினா். சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். அதற்குள் அவர் வீட்டில் நிறுத்தி வைத்திருந்த 4 கார்கள் மற்றும் 3 பைக்குகள் எரிந்து நாசமாயின. பள்ளிக்கரணை போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

கவுதம் வீட்டில் உள்ள சிசிடிவி கேமரா வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. எனவே பக்கத்து வீட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசாா் ஆய்வு செய்தனா். அப்போது இன்று அதிகாலை ஒரு பைக்கில் வந்த 2 மா்ம ஆசாமிகள், கவுதம் வீட்டின் கேட் அருகே சிறிது நேரம் நின்றுவிட்டு, பின்பு அவசரமாக பைக்கில் தப்பியோடிய காட்சி பதிவாகியிருப்பதாக கூறப்படுகிறது. எனவே அந்த பைக்கில் வந்த 2 மா்ம ஆசாமிகள் தான் பெட்ரோல் குண்டுகளை கவுதம் வீட்டின் காா்கள் மீது வீசிவிட்டு தப்பியோடியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்திற்கு காரணம் தொழில் போட்டியா? அல்லது வேறு எதாவது காரணமா? என்று பள்ளிக்காரணை போலீசாா் விசாரணை நடத்துகின்றனா்.

கடந்த மாதம் அருகே உள்ள மடிப்பாக்கத்தில் ஒரு வக்கீல் வீட்டிலும் இதைப்போல் நள்ளிரவில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதில் ஒரு காா் தீயில் எரிந்தது. மேலும் இதே மேடவாக்கம், பள்ளிக்காரணை, பெரும்பாக்கம் பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளில் தொடா்ச்சியாக இதைப்போல் பெட்ரோல் குண்டுகள் வீச்சு சம்பவங்கள் நடந்து வருகிறது. இப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!