தமிழகம் முழுவதும் 21 மாநகராட்சிகளில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
தமிழக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் 21 மாநகராட்சிகளிலும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாம்பரம் மாநகராட்சி சொத்து வரி உயர்வை கண்டித்து தாம்பரம் சண்முகம் சாலையில் செங்கல்பட்டு மாவட்ட பாஜக தலைவர் வேத சுப்பிரமணியம் தலைமையில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார் தமிழக அரசின் சொத்து வரி உயர்வை வாபஸ் பெறக்கோரி பாஜகவினர் கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கரு.நாகராஜன் கூறுகையில் :
இரண்டரை ஆண்டுக் கொரோனா காலத்திற்கு பிறகு தற்போதுதான் சகஜ நிலைக்கு மக்கள் திரும்பி வருகிறார்கள். உள்ளாட்சி பிரதிநிதிகள் பொறுப்பேற்றவுடன் உள்ளாட்சிகளில் நல்ல பணிகளை செய்வார்கள் என மக்கள் எதிர்பார்த்த நிலையில் அநியாய சொத்து வரி உயர்வை திமுக அரசு அறிவித்துள்ளது. இதற்கும் சம்பந்தமே இல்லாமல் மற்று மாநிலத் தலைநகரங்களை ஒப்பிட்டுள்ளது.
மத்திய அரசின் நிதி ஆதாரங்களை பயன்படுத்தாமல் பல இடங்களில் நிறுத்தி நிதி திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் மத்திய அரசு கூறித்தான் சொத்து வரியை உயர்த்துவதாக பச்சை பொய்யை திமுக அரசு கூறி வருகிறது. இதை கண்டித்து பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று போராட்டம் நடைபெறுகிறது.
அநியாய சொத்து வரி உயர்வை திமுக அரசு அரசாணைதான் வெளியிட்டுள்ளது. எப்பொழுது வேண்டுமானாலும் அனைவரையும் அழைத்து பேசி இதனை குறைக்கலாம் திமுக அரசின் வரி திணிப்பை கண்டித்து பாஜக போராட்டம் தொடரும் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர் பல்லாவரம் ஹரிபாபு, தேசிய வழக்கறிஞர் பிரிவு ஆதி குமரகுரு, மாவட்ட செயலாளர் இளங்கோ, நகர தலைவர் குருநாதன், ஊடகப்பிரிவு சீனிவாசன் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu