தாம்பரத்தில் நூதன முறையில் சரக்கு வாகனத்தில் திருடிய 7 பேர் கைது
நூதன முறையில் திருட்டு நடைபெற்ற கம்பெனியில் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் நேரடி விசாரணை நடத்தினார்.
தாம்பரம் ஆணையரக எல்லைக்குட்பட்ட மெப்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் செயல்பட்டு வரும் மெட்ராஸ் எக்ஸ்போர்ட் பிராசசிங் சோனில் உள்ள பார்மா செல் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திலிருந்து கடந்த 18ம் தேதி ஜெர்மன் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட 14,400 கிலோ மருந்து பொருட்களை கண்டெய்னர் லாரியில் ஏற்றி துறைமுகத்திற்கு அனுப்பியதில் 4800 கிலோ எடை குறைவாக மருந்து பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
பார்மா செல் நிறுவனம் கண்டெய்னர் லாரியை பார்த்த போது சீல் உடைக்கப்படாமல் நூதன முறையில் ரூ. 98 லட்சம் மதிப்பிலான 4800 கிலோ மருந்து பொருட்கள் திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்து நிறுவனம் சார்பில் காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் தாம்பரம் துணை ஆணையர் சிபிசக்ரவர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தேடி வந்த நிலையில் கண்டெய்னர் லாரி ஓட்டுநர்கள் மூலம் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார், மாறன்(எ) இளமாறன், சிவபாலன், வட சென்னையை சேர்ந்த கார்த்திக், முனியாண்டி, ராஜேஷ் மற்றும் சங்கர் ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது.
விசாரணையில் இந்த கும்பல் கண்டெய்னர் சீலை அகற்றாமல் மேலே மற்றும் கீழே உள்ள அச்சாணிகளை(bolt) கழற்றி விட்டு ஒரு பகுதியை திருடிவிட்டு மீண்டும் புதிய போல்ட்களை போட்டுவிட்டு சென்றுள்ளனர். திருடிய பொருட்களை மீஞ்சூர் அருகிலுள்ள கவுண்டர்பாளையத்தில் சங்கர் மூலமாக பதுக்கி வைத்து முனியாண்டி, ராஜேஷ் மூலம் விற்று வந்துள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்த கும்பல் தாம்பரம் மெப்சில் இருந்து 1 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள மருந்து பொருட்களையும், ஆம்பூரில் இருந்து கண்டெய்னரில் கொண்டு வரப்பட்ட 75 லட்சம் மதிப்புள்ள 3000 ஜோடி காலணி(ஷூ), திருப்போரூர் அருகிலிருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 50 லட்சம் மதிப்பிலான 1100 யமஹா கீபோர்டு ஆகியவற்றை திருடியது தெரியவந்தது.
மேலும் ஆம்பூரில் ஷூ கம்பெனியில் இருந்து 1800 ஜோடி ஷூக்களும், ஆந்திரா, தடாவில் இருந்து 1000 ஷூக்களும் திருடியது தெரியவந்தது.இச்சம்பவம் தொடர்பாக தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் செய்தியாளர் சந்திந்து பேசுகையில்
தாம்பரம் மெப்சில் உள்ள ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் பார்மா செல் வெளிநாட்டிற்கு அனுப்பும் பொருட்கள் திருடப்பட்டதாகவும், கடந்த 18ம் தேதி காணாமல் போனதாக புகார் வந்தது. அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்து கண்டெய்னர் ஓட்டுநர்கள் மூலம் குற்றவாளிகள் 7 பேரை கைது செய்து விசாரித்ததில் இது போன்று பல திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இளமாறன் என்பவர் ஆரம்பத்தில் டீசல் திருடி விற்று வந்து பெரிய அளவில் திருடி வாழ்க்கையில் செட்டில் ஆக எண்ணி பெரிய அளவில் திருட திட்டமிட்டு சிலரை சேர்த்துக் கொண்டு திருடியுள்ளனர்.
திருடிய சில பொருட்களை விற்க முடியாமல் இருந்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரித்து வருவதாக தெரிவித்தார்.இது போன்று சம்பவங்களில் புகார்கள் அளிக்கப்படாததால் தொடர்ந்து திருடி வந்துள்ளனர்.
விலையுயர்ந்த பொருட்கள் அனுப்பும் நிறுவனங்கள் ஓட்டுநர்களின் நன்னடத்தை நம்பகத்தன்மையை உறுதி செய்யவும், வாகனத்தில் ஜி.பி.எஸ். பொருத்தவும், பாதுகாப்பு அலுவலரை அனுப்பவும் அறிவுறுத்தினார். இவர்களிடமிருந்து 2 கோடியே 75 லட்சம் மதிப்பிலான மருந்து பொருட்கள், ஷூக்கள், கீபோர்டுகள் மீட்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu