இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு மானியத்தொகை வழங்கும் பணி மும்முரம்
இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு மானிய தொகை
செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்கள் உள்ளன. மாவட்டத்தில், விவசாய நிலங்களில் நெல், உளுந்து, மணிலா உள்ளிட்ட பயிர்களை, விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
இதில், மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம் ஆகிய தாலுகாக்களில், முழுமையாக விவசாயம் சாகுபடி செய்யப்படுகிறது.
தற்போது, 2023- 24ம் நிதியாண்டின் வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், செங்கல்பட்டு மாவட்டத்தின் எட்டு வட்டாரங்களில், 500 ஏக்கர் பரப்பளவில், பாரம்பரிய இயற்கை வேளாண்மை வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வேதியியல் பொருட்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால், மண்ணும் நீரும் நச்சு தன்மைடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
அவற்றை தவிர்க்கும் விதமாக, இயற்கையான எருவை பயன்படுத்தி, ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் இல்லமால் வேளாண்மை செய்யும், அங்கக வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஒட்டுமொத்த வேளாண்மை வளர்ச்சி மற்றும் தன்னிறைவு அடையும் நோக்கத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட கிராம ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு, அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டது.
மாவட்டத்தில், 50 ஏக்கர் பரப்பில் இயற்கை விவசாயம் செய்ய, ஒரு கிராமம் மற்றும் அதை சுற்றியுள்ள 20 விவசாயிகள் கொண்ட விவசாய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தில், முழுமையாக தங்களது விளை நிலங்களை இயற்கை விவசாய நடைமுறைக்கு மாற்றும் வகையில், மூன்று ஆண்டுகளுக்கு விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் கண்டுணர் சுற்றுலா அளிக்கப்பட்டுள்ளது.
இயற்கை விவசாய இடுபொருட்கள், சான்றிளிப்பு நடைமுறைகள், மதிப்புக்கூட்டி விற்பனை செய்தல் தொடர்பான தொழில்நுட்பங்கள் குறித்த ஆலோசனைகளை அதிகாரிகள் வழங்கினர்.
நிலத்தை பண்படுத்துதல், இயற்கை விதைகள் கொள்முதல் செய்தல், உயிர் உரங்கள், திரவ உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள், இடுபொருட்களான பஞ்சகாவியா, ஜீவாமிர்தம், பீஜாமிர்தம் மற்றும் வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லி மருந்து போன்றவற்றுக்கு, 50 சதவீதம் மானியத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இயற்கை விவசாயம் பற்றி தெரிந்து கொள்ள, விவசாயிகள் உழவன் செயலி அல்லது www.tnagrisnet.tn.gov.in என்ற வலைதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.
இயற்கை விவசாயம் செய்தல் குறித்து, இணைய வழியில் பதிவு செய்ய இயலாத விவசாயிகள், நில உரிமை ஆவணம், ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன், வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம். மாவட்டத்தில் இயற்கை விவசாயம் செய்ய, விவசாயிகள் ஆர்வமாக வருகின்றனர். இயற்கை விவசாயம் செய்ய, 2.5 ஏக்கருக்கு, 12,000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu