தாம்பரம் புதிய காவல் ஆணையரகம்: நிர்வாக குழப்பத்தால் போலீஸார் வேதனை

தாம்பரம் புதிய காவல் ஆணையரகம்: நிர்வாக குழப்பத்தால்  போலீஸார்  வேதனை
புகார் அளிக்க சென்றவர்கள் வெவ்வேறு இடங்களில் புகார் அளிக்குமாறு மாறி மாறி போலீஸாரால் அலைக்கழிக்கப்பட்டுள்ளனர்

தாம்பரம் காவல் ஆணையரகத்தில் உள்ள நிர்வாக குளறுபடியால் போலீஸார் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தாம்பரம் காவல் ஆணையரகம், முழுமையாக செயல்பாட்டுக்கு வராத நிலையில், ஆணையரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீஸார் பலர் குழப்பத்துடன் பணிபுரிவதாக புகார் எழுந்துள்ளது.

தாம்பரம் காவல் ஆணையரகம், 1ம் தேதி முதல் செயல்படத் துவங்கியது. புதிய ஆணையரக அலுவலகம், மேடவாக்கம் - சோழிங்கநல்லுார் சாலையில், 2.5 ஏக்கர் பரப்பு கொண்ட, ஒரு தனியார் கட்டடத்தில் செயல்படுகிறது. போலீஸ் கமிஷனராக, ரவி நியமிக்கப்பட்டு உள்ளார். மொத்தம் 20 காவல் நிலையங்களுடன் தாம்பரம் காவல் ஆணையரகம் செயல்படுகிறது.

இந்த ஆணையரகத்தின் கீழ், தாம்பரம், கூடுவாஞ்சேரி மற்றும் பள்ளிக்கரணை என, மூன்று காவல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.புதிய ஆணையரகம் துவங்கப்பட்டிருந்தாலும், சென்னை காவல் ஆணையரகத்தில் இருந்து, நிர்வாகம் முழுமையாக பிரிக்கப்படாமல் உள்ளது.

மேலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து, தாம்பரம் காவல் ஆணையரகத்துடன் இணைந்துள்ள, காவல் நிலையங்களின், நிர்வாகமும், முழுமையான செயல்பாட்டுக்கு வரவில்லை.இதனால், நேற்று முன்தினம் இரவு, சோமங்கலம் காவல் நிலைய எல்லையில் நடந்த, குடும்ப பிரச்னை தொடர்பாக, புகார் அளிக்க சென்றவர்கள், ஸ்ரீபெரும்புதுார் மற்றும் தாம்பரம் மகளிர் காவல் நிலையங்கள் என வெவ்வேறு இடங்களில் புகார் அளிக்குமாறு மாறி மாறி போலீஸாரால் அலைக்கழிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், நிர்வாக ரீதியான பிரச்னையால், தாம்பரம் காவல் ஆணையரக எல்லையில், பணிபுரியும் போலீசாஸாக்கு, நேற்று வரை சென்னை காவல் ஆணையரகத்தில் இருந்தே இரவு பணி நியமிக்கப்பட்டு வருகிறது. இதனால், நுண்ணறிவு பிரிவு போலீசாரும், யாருக்கு தகவல் தெரிவிப்பது என புரியாமல் குழம்பி வருகின்றனர். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு என, தனி சேனல் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதன் பயன்பாடும் முழுமையாக வராததால், புகார் அழைப்புகளை எடுப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. போலீஸ் கமிஷ்னர் தலையிட்டு இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என பரவலான கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story