கடைக்குள் புகுந்து இளைஞரை வெட்டிய வழக்கில் சிறுவன் உட்பட 5 பேர் கைது

கடைக்குள் புகுந்து இளைஞரை வெட்டிய வழக்கில் சிறுவன் உட்பட 5 பேர் கைது
X

தாக்கப்பட்ட இளைஞர் விஷ்ணு.

கடைக்குள் புகுந்து இளைஞரை வெட்டிய வழக்கில் சிறுவன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னையை அடுத்த நன்மங்கலத்தை சேர்ந்தவர் விஷ்ணு(21). இவர் கோவிலம்பாக்கம் சத்யா நகரில் உள்ள பிளைவுட் கடையில் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 14 ஆம் தேதி இரவு 5 பேர் கொண்ட கும்பல் கத்தியுடன் திடீரென கடைக்குள் புகுந்து அங்கிருந்த விஷ்ணுவை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடி விட்டனர்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த விஷ்ணுவை மீட்ட அப்பகுதியினர் குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விஷ்ணுவை கொலை செய்ய வந்தவர்கள் யார் என்பது குறித்தும் கொலை செய்யும் அளவிற்கு என்ன நடந்தது என்பது குறித்தும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த சக்திவேல்(19), சோலையப்பன்(19), சந்தோஷ்குமார்(20), மணிமாறன்(23) மற்றும் ஒரு இளஞ்சிறாரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது

மேடவாக்கம் வெள்ளக்கல் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் நன்மங்கலத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கும், கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

நன்மங்கலத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் நன்மங்கலம் பகுதியைச் சேர்ந்த விஷ்ணுவிடம் தெரிவித்த நிலையில் விஷ்ணு கோவிலம்பாக்கத்திற்கு சென்று அந்த பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களிடம் கேட்டறிந்து சண்டையிட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.


இதனால் கோபம் அடைந்த கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் அந்த பகுதியில் உள்ள இளைஞர்களிடம் தெரிவித்த போது அப்பகுதியைச் சேர்ந்த 5 இளைஞர்கள் கத்தியை எடுத்துக் கொண்டு விஷ்ணுவை கடைக்குள் புகுந்து வெட்டி உள்ளனர் என தெரியவந்தது.

பின்னர் 5 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த பள்ளிக்கரணை போலீசார் 4 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இளஞ்சிறுவனை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.

மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
ai future project