மின்சார டிரான்ஸ்பாா்மா் மீது மோதிய காா்
செங்கல்பட்டு மாவட்டம் பள்ளிக்கரணை, வி.ஜி.பி. சாந்தி நகரை சேர்ந்தவர் காஜா மொய்தீன் (38). இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பிராண்ட் துணிக்கடையில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக கடை விடுமுறை என்பதால் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை வீட்டில் இருந்து அருகில் உள்ள கடை ஒன்றுக்கு காரில் சென்றார். பின் பொருட்களை வாங்கிக்கொண்டு அதே காரில் வி. ஓ.சி.நகர் மெயின் சாலை வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது கார் அவர் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி திடீரென்று சாலை ஓரத்தில் இருந்த டிரான்ஸ்பார்மர் மின் கம்பத்தில் மோதி நின்றது.
அதே சமயத்தில் காரின் முன்பகுதி திடீரென்று தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அப்போது காஜாமைதீன் காருக்குள் சிக்கிக்கொண்டாா். அதற்குள் கார் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியதால் புகை மூட்டத்தில் சிக்கி வெளியே வர முடியவில்லை என தெரிகிறது. இதைப் பார்த்த பொதுமக்கள் சம்பவம் குறித்து பள்ளிக்கரணை காவல் நிலையம் மற்றும் மேடவாக்கம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
மேடவாக்கம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். போலீசார் உடல்கருகி இறந்து இரண்டு துண்டாக இருந்த காஜா மொகைதீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கார் எப்படி தீப்பற்றியது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தடயவியல் நிபுணர்களும் வந்து அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu