தி.மு.க. பிரமுகர் மடிப்பாக்கம் செல்வம் கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது

தி.மு.க. பிரமுகர் மடிப்பாக்கம் செல்வம் கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது
X

மடிப்பாக்கம் செலவம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேர்.

தி.மு.க. பிரமுகர் மடிப்பாக்கம் செல்வம் கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தி.மு.க. பிரமுகரான செல்வம் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி மடிப்பாக்கம் அருகே அவரது கட்சி அலுவலகத்தின் அருகே அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

உள்ளாட்சித் தேர்தல் தேதி நெருங்கி வந்த நிலையில் தி.மு.க பிரமுகர் கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் 6 தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தீவிரமாக தேடி வந்தனர். மேலும், அவரது மனைவிக்கு மடிப்பாக்கம் பகுதியில் உள்ளாட்சித் தேர்தலில் சீட் ஒதுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அரசியல் ஆதாயத்திற்காக இந்தக் கொலை அரங்கேற்றப்பட்டதா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 3 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே கூலிப்படையைச் சேர்ந்த விக்னேஷ், புவனேஷ்வர், சஞ்சய், கிஷோர் உள்ளிட்ட 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து கூலிப்படையைச் சேர்ந்த மற்றொரு நபரான அருண் என்பவர் பிப்ரவரி 15 ஆம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். முருகேசன் தான் கூலிப்படையின் தலைவன் என்பதால் போலீசார் சரணடைந்த அருணை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கிஷோர் என்பவர் மடிப்பாக்கம் செல்வத்தை கொலை செய்ய தங்களை வரவழைத்ததாகவும் கொலைக்கான காரணம் தங்களுக்கு தெரியாது எனவும் அருண் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த கூலிப்படை தலைவனான முருகேசனை தனிப்படை போலீசார் மார்ச் 13ம் தேதி வியாசர்பாடியில் வைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட முருகேசன் ஏற்கனவே பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்ற அடிப்படையிலும், அவர்தான் மடிப்பாக்கம் செல்வம் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட கூலிப்படையின் தலைவன் என்பதால், கொலைக்கான காரணம் குறித்து இரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர் மடிப்பாக்கம் குபேரன் நகரில் உள்ள 4 கிரவுண்ட் இடம் தொடர்பாக செல்வம் மற்றும் மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி முத்து சரவணன், பாபண்ணன் ஆகியோருக்கு தகராறு ஏற்பட்டதாகவும், அந்த இடத்தில் கூலிப்படை தலைவன் முருகேசன் இரண்டு முறை பெயர்பலகையை வைத்த போது அதனை செல்வம் பிடுங்கி போட்டதாகவும், இதனால் ரவுடி கும்பல் கடும் கோபத்திற்கு சென்றதாகவும், இதன் காரணமாக செல்வத்தை போட்டு தள்ள முடிவு செய்து பிரபல ரவுடி முத்து சரவணன் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து முடித்ததாகவும், அனைவரும் வாட்ஸ்அப் காலில் தான் அனைத்து வேலைகளையும் கொடுத்ததாகவும், மற்ற விவரங்கள் ஏதும் தெரியாது என முருகேசன் தெரிவித்தார்.

அதனடிப்படையில் முத்து சரவணனை மடிப்பாக்கம் போலீசார் அமைந்தகரையில் வைத்து கடந்த 20ம் தேதி கைது செய்து 6 நாட்களாக விசாரணை மேற்கொண்டதில் முருகேசனுக்கு தான் எல்லாம் தெரியும் என்று கூறியுள்ளார். 26ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அவர் கொடுத்த தகவலின் பேரில் வேளச்சேரி சார்பதிவாளர் அலுவலக எழுத்தர் மடிப்பாக்கத்தை சேர்ந்த ஜெயமுருகன்(42), 188வது வார்டு தி.மு.க. பிரமுகர் குட்டி(எ)உமா மகேஸ்வரன்(43), தி.மு.க. மீனவர் அணியை சேர்ந்த சகாய டென்ஸி(55), மற்றும் புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த செங்கல்பட்டு மாவட்ட பொருளாளர் ரவி(எ) ரமேஷ் ஆகியோர் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story