பல்லாவரத்தில் மீண்டும் தலை தூக்கிய பேனர் கலாச்சாரம்

அமைச்சரை வரவேற்று சாலையில் வைக்கப்பட்டுள்ள பேனர்
சென்னை பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறு குறு தொழில்துறை அமைச்சர் தா.மோ அன்பரசன், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு எம்.பி.மற்றும் மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் ஐ.ஏ.எஸ். ஆகியோர் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்றனர். தமிழக முதல்வரின் திட்டமான மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் நூற்றுகணக்கான மக்கள் கோரிக்கை மனுவை அளிக்க வந்ததிருந்தனர்.
இந்தநிலையில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்திற்கு வருகை தந்த அமைச்சர் மற்றும் எம்.பியை வரவேற்கும் விதமாக பொதுமக்கள் கூடும் பல இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. ஏற்கனவே பல்லாவரம் அருகே அரசியல் கட்சியினர் சாலையில் பேனர் வைத்ததில் பேனர் சரிந்து விழுந்து இளம் பெண் சுபஸ்ரீ உயிரிழந்தார். அதனை தொடர்ந்து உயர்நீதிமன்றமும் பொது இடங்களில் பேனர் வைக்க தடை விதித்துள்ளது.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் பேனர் கலாச்சாரத்தை திமுகவினர் அடியோடு நிறுத்திவிட வேண்டும் என திமுக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் பலமுறை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆனால் தமிழக முதல்வரின் வேண்டுகோளையும் மீறி, ஆளும் கட்சி திமுக சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதியே அமைச்சர் தா.மோ அன்பரசனையும், டி.ஆர்.பாலு எம்பியையும் வரவேற்று பேனர் வைத்தது சர்ச்சையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
கட்சியின் தலைமையின் உத்தரவை கூட அரசின் நிகழ்ச்சியில் பின்பற்றாமல் பேனர்கள் வைத்துள்ளது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பொது இடங்களில் இது போன்ற பேனர்களால் விபத்து ஏற்படும் அபாயத்தை இனியாவது தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள்னர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu