குரோம்பேட்டை, மயிலாடுதுறையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனையால் பரபரப்பு
சென்னை குரோம்பேட்டையில் சாதிக் பாஷா என்பவர் குறித்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் இன்று காலை திடீர் சோதனையும் விசாரணையும் நடத்திய குடியிருப்பு பகுதி.
மயிலாடுதுறை அருகே நீடூரைச் சேர்ந்தவர் சாதிக் பாஷா உட்பட 5 பேரை, ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறையினர் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு சமீபத்தில் தேசிய புலனாய்வு பிரிவின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடையவர்களுக்கு சொந்தமான இடங்களில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர். அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் நீடுர், கிளியனூர், உத்திரங்குடி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
மேலும் சென்னை குரோம்பேட்டை, நாகல்கேணி, பீட்டர் தெருவில் இக்னா சாதிக்பாஷா என்பவர் குடியிருப்பு பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். இன்று காலை 6.30 மணிக்கு அங்கு வந்த என்.ஐ.ஏ அதிகாரிகள் 8.30 மணி வரை சுமார் இரண்டு மணி நேரம் அங்கிருந்த கல்லூரி மாணவர் அபுபக்கர் தையூப் (21) மற்றும் அவரது அண்ணன் சதக்கத்துல்லா ஆகியோரிடம் துருவித்துருவி விசாரணை செய்தனர். இதையடுத்து சோதனை விவரங்கள் குறித்து எதுவும் அறிவிக்காமல் அங்கிருந்து வேகமாக அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.
சோதனை நடத்தப்பட்ட வீட்டில் இருந்து எந்த பொருளையும் கைப்பற்றவில்லை, யாரையும் விசாரணைக்கும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் தங்களுடன் அழைத்துச் செல்லவில்லை என தகவல் வெளியாகிறது. சென்னை, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் ஒரே சமயத்தில் எட்டு இடங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியது அப்பகுதியினர் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu