சென்னை விமானத்தில் முகக்கவசம் அணியாமல் ரகளை: 2 பேர் போலீசிடம் ஒப்படைப்பு
சென்னை விமான நிலைய போலீஸ் ஸ்டேஷன்.
பெங்களூரிலிருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் 28 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது,விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த பயணிகளான சென்னையை சோ்ந்த முகமது அா்ஸ்சத் (22), தாரிக் ரகுமான்(29) ஆகிய இருவரும் முகக்கவசங்களை கழற்றி பாக்கெட்களில் வைத்துக்கொண்டு பயணம் செய்தனா்.
சக பயணிகள் அவா்களை முகக்கவசங்களை அணியும்படி வலியுறுத்தினார்கள். ஆனால் அவா்கள் அணிய மறுத்துவிட்டனா்.இதையடுத்து சகபயணிகள் விமானபணிப் பெண்களிடம் தெரிவித்தனா். உடனே விமானப்பணிப்பெண்கள் வந்து இருவரையும் முகக்கவசங்கள் அணியும்படி கூறினார்கள்.
ஆனால் இரு பயணிகளும், நாங்கள் விமானத்திற்குள் தானே இருக்கிறோம். எதற்காக முகக்கவசம் அணிய வேண்டும்? காரில் செல்பவா்கள் கூட முகக்கவசங்கள் அணிவதில்லை என்று எதிா்வாதம் செய்தனா். இதனால் விமானப்பணிப் பெண்கள் தலைமை விமானியிடம் புகாா் செய்தனா்.
இதையடுத்து விமானி உடனடியாக சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தாா். விமானம் சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் தரையிறங்கியது. விமானத்தின் கதவுகள் திறந்ததும், விமான பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்திற்குள் ஏறினா். அவா்களை பாா்த்ததும், அதுவரை முகக்கவசங்கள் அணிய மறுத்து ரகளை செய்துவந்த இருவரும், அவசரமாக மாஸ்க்குகளை எடுத்து அணிந்தனா்.
ஆனாலும் பாதுகாப்பு அதிகாரிகள் இருவரையும் விமானத்தை விட்டு இறக்கி, இண்டிகோ ஏா்லைன்ஸ் அலுவலகம் அழைத்து சென்று விசாரணை நடத்தினா். அப்போதும் இருவரும் தாங்கள் செய்தது தவறு இல்லை என்று விவாதம் செய்தனா்.
இதையடுத்து இன்று அதிகாலை பயணிகள் இருவரையும் இண்டிகோ ஏா்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள் சென்னை விமானநிலைய போலீசில் ஒப்படைத்தனா். போலீஸ் விசாரணையில் இருவரும் கோழிக்கறி வியாபாரிகள் என்றும், வியாபார விசயமாக பெங்களூா் சென்று திரும்பியதாகவும் தெரியவந்தது. இருவரிடமும் மேலும் விசாரணை நடத்துகின்றனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu