வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த பலே பெண் கைது

வேலை வாங்கி தருவதாக  கூறி மோசடி செய்த பலே பெண் கைது
X
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த பெண்
வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த பெண்ணை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த சேலையூரைச் சேர்ந்த பூபதி என்பவர் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார்.அந்த புகாரில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்டெபி என்ற ஸ்டெல்லா (41) என்பவர் தனக்கு அறிமுகமானதாகவும், தான் வழக்கறிஞராக இருந்து வருவதால் தனக்கு அரசியல் பிரமுகர்கள் பலருடன் தொடர்பு இருந்து வருவதாக தெரிவித்து அரசியல் பிரமுகருடன் எடுத்த புகைப்படங்களையும் தனக்கு காட்டியதாக தெரிவித்துள்ளார்.

இதனால், மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளர், துப்புரவு மேற்பார்வையாளர், சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் பணி நிரந்தரம் பெற்றுத்தருவதாக கூறிய ஸ்டெபி, அதற்கு 5 லட்சம் ரூபாய் தரவேண்டுமென தெரிவித்துள்ளார்.

இதனை நம்பி தான் ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும், நீண்ட காலமாகியும் பணி மற்றும் பணமும் திருப்பித் தராமல் ஸ்டெபி ஏமாற்றி வருவதாக புகாரில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2020 வரை சுமார் 35 நபர்களிடம் ஒரு கோடியே 18 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் வரை வேலை வாங்கித் தருவதாக ஸ்டெபி ஏமாற்றி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து ஸ்டெபியை தீவிரமாக தேடிவந்தனர்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்து ஸ்டெபியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஸ்டெபியிடமிருந்து 90 ஆயிரம் ரூபாய் மற்றும் 11 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து ஸ்டெபியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அரசு வேலை வாங்கித் தருவதாக அரசியல் பிரமுகர்களுடன் எடுத்த புகைப்படத்தை காண்பித்து மோசடியில் ஈடுபடும் நபர்களிடம் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!