தள்ளிப்போகும் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய திறப்பு விழா

தள்ளிப்போகும் கிளாம்பாக்கம் பேருந்து  நிலைய திறப்பு விழா
X

கிளாம்பாக்கம் பேருந்து நிலைய மாதிரி 

சாலை, கால்வாய் அமைக்கும் பணி முடியாததால் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா தாமதமாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்

கோயம்பேடு பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டும்பணி நடந்து வருகிறது. இங்கிருந்து வெளியூர்களுக்கு செல்லும் விரைவு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் ரூ.400 கோடி மதிப்பில் பணிகள் நடந்து வருகின்றன. இதன் அருகிலேயே ஆம்னி பேருந்து நிலையம் அமைக்கவும் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணிகள் 90 சதவீதத்துக்கு மேல் முடிந்து உள்ளன. இதனை அமைச்சர் சேகர்பாபு அவ்வப்போது ஆய்வு செய்து வந்தார். எனவே இந்த மாதத்தில் புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பேருந்து நிலையத்தின் பின்புறத்தில் அய்யன்சேரி வழியாகச் சென்று ஊரப்பாக்கம் நெடுஞ்சாலையை கடந்து செல்வதற்கான சாலை அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த சாலை அமைத்தால் வாகனங்கள் தொடர்ச்சியாக செல்லும்போது ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலை சந்திப்பில் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படும் என்பதால் மாற்று சாலையை கருத்தில் கொண்டு அந்த சாலை பணி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காத வண்ணம் பேருந்து நிலைய பகுதியில் கால்வாய் அமைக்கும் பணியும் இன்னும் முடியவில்லை. தேங்கும் நீரை மறுபுறம் கொண்டு செல்ல ஜி.எஸ்.டி. சாலையின் குறுக்கே குழாய் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பேருந்து நிலையத்தின் முன்பகுதியிலும் பேருந்துகள் செல்ல சாலைப்பணி இன்னும் முழுமையாக முடியாமல் தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் ஆம்னி பேருந்து நிறுத்தத்திற்கான இடத்தை படப்பை அருகில் தேர்வு செய்து இருந்தனர். அந்த இடத்தை ஆய்வு செய்தபோது ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரும்போதும், பயணிகளை ஏற்றி சென்று மீண்டும் செல்லும் போதும் அந்த வாகனம் இரண்டு முறை டோல்கேட்டுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் நிலை உள்ளது. எனவே ஆம்னி பேருந்து நிலைய இடத்தையும் கைவிட்டு உள்ளனர். ஆம்னி பேருந்துகளுக்கான இடத்தையும் ஆய்வு செய்து கொண்டு இருக்கிறார்கள்.

இதேபோல் பேருந்து நிலைய மேற்கூரை பணிகளும் பயணிகள் வந்து தங்குவதற்கான தங்குமிடம், உணவகம் மற்றும் கடைகள் பணியும் முடிவடையாததால் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய திறப்பு தள்ளிப்போகும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Tags

Next Story