கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
X

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலைய பணிகளை ஆய்வு மேற்கொள்ளும் அமைச்சர் சேகர் பாபு 

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் அமைக்க முதலில் கூறப்பட்ட தொகையை விட ரூ.100 கோடிக்கு பணிகள் கூடுதலாக நடந்துள்ளதாக அமைச்சர் கூறினார்

சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ஜி.எஸ்.டி சாலையையொட்டி புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. ரூ.394 கோடி செலவில் 88.50 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் இந்த பேருந்து நிலையம் அமைய உள்ளது. சுமார் 6.40 லட்சம் சதுரஅடி பரப்பளவில் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் 90 சதவீதத்துக்குமேல் முடிந்து உள்ளன. இந்த புதிய பேருந்து நிலையத்துக்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என்று பெயரிடப்பட்டு உள்ளது.

சமீபத்தில் பெய்த மழையின் போது பேருந்து நிலைய முன்பகுதியில் தண்ணீர் தேங்கியதால் அப்பகுதியில் புதிதாக மழைநீர்கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் பணிகள் முழுவதும் முடிந்து திறப்பு விழா நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்தார். அப்போது பேருந்து நிலையத்துக்குள் பணிகள் முடிந்த பகுதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும் தற்போது நடந்து வரும் மழைநீர் வடிகால்வாய் மற்றும் மீதமுள்ள பணிகளை அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந் தேதிக்குள் முடிக்க உத்தரவிட்டார்.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில், கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் அமைக்க முதலில் கூறப்பட்ட தொகையை விட ரூ.100 கோடிக்கு பணிகள் கூடுதலாக நடந்துள்ளது. இதற்காக மூன்றுக்கும் மேற்பட்ட சாலைகள் விரிவாக்கப்பட்டுள்ளன.

கூடுவாஞ்சேரி முதல் மாடம்பாக்கம் வரையிலும், மாடம்பாக்கத்தில் இருந்து ஆதனூர் சாலை, ஆதனூரில் இருந்து வண்டலூர்-வாலாஜா சாலை இணைப்பு, அய்யஞ்சேரி முதல் மீனாட்சிபுரம் வரை, போலீஸ் அகாடமி, வனத்துறைக்கு சொந்தமான இரண்டு கிலோமீட்டர் சாலை அமைக்கும் பணிகள் புதிதாக மேற்கொள்ளப்பட்டது.

தினமும் 450 பேருந்துகள் வந்து செல்லும் வகையிலும், 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்ல ஏதுவாகவும் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

ஆம்னி பேருந்துகளுக்கான பேருந்து நிலையம் முடிச்சூரில் கட்டப்பட்டு வருகிறது. மேலும் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காத வண்ணம் இருக்க ரூ.17 கோடி செலவில்1250 மீட்டர் நீளத்திற்கு மழை நீர் வடிகால் பணிகள் நடைபெறுகின்றன. இதில் 750 மீட்டர் பணிகள் முடிவடைந்த நிலையில் இன்னும் சில நாட்களில் அந்த பணிகளும் முடிந்து விடும்.

வாகனங்கள் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்வதற்கும் புதிய நுழைவு வாயில்கள் அமைக்கப்படும். பயணிகள் பொழுது போக்கிற்கு பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்த பிறகு எந்தவித போக்குவரத்து நெரிசலும் ஏற்படாதபடி அனைத்து நடவடிக்கைகளும் அதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. பயணிகளின் பாதுகாப்பை கருதி ரூ.13 கோடியில் நவீன காவல் நிலையம் அமைக்கப்படும். தொடர்ந்து மக்களின் நலனுக்காக மருத்துவமனை என பல்வேறு பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் முதலமைச்சரால் திறந்து வைக்கப்படும் என்று கூறினார்

ஆய்வின் போது சென்னை பெருநகர வளர்ச்சி குழும செயலாளர் சமய மூர்த்தி, சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலாளர் அன்சுல் மிஸ்ரா, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!