மாமல்லபுரம் பேருந்து நிலைய பணிகள் விரைவில் தொடக்கம்
தற்போதைய மாமல்லபுரம் பேருந்து நிலையம் - கோப்புப்படம்
மாமல்லபுரம் பல்லவர் கால சிற்பங்களை காண, ஒவ்வொரு ஆண்டும் பயணியர் வருகை அதிகரித்து வருகிறது. ஆனால், இங்கு நிரந்தர பேருந்து நிலையம் இல்லாமல் சுற்றுலா பயணியர் அவதியடைந்து வருகின்றனர்.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, ஸ்தலசயன பெருமாள் கோவிலின் முன்புறம் உள்ள குறுகிய திறந்தவெளி இடமே, பேருந்து நிலையமாக செயல்படுகிறது
மாமல்லபுரம் வரும் அரசு, மாநகர், தனியார் பேருந்துகளை நிறுத்த, போதிய இட வசதியின்றி கடுமையான நெருக்கடி ஏற்படுகிறது. பயணியர், திறந்தவெளியில் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பேருந்து நிலைய பகுதி, பிரதான சாலைகள் இணையும் சந்திப்பாக அமைந்துள்ளது. பேருந்துகளை நிறுத்தவும், வெளியேறவும் முயற்சிக்கும்போது, சாலையில் செல்லும் மற்ற வாகனங்கள் செல்ல இயலாமல், நெரிசலில் போக்குவரத்து முடங்குகிறது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், பயணியர் குறைவாக வந்த காலத்திலே, பேருந்து நிலையம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின்கீழ் இயங்கும், மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சிக் குழுமம் திட்டத்தை செயல்படுத்துவதாக, 1992ல் அறிவித்தது.
திருக்கழுக்குன்றம் சாலை, பக்கிங்ஹாம் கால்வாய் அருகில், 6.80 ஏக்கர் இடத்தை, வருவாய் துறை ஒதுக்கியது. நீண்ட இழுபறிக்கு பின், குழுமத்திடம் ஒப்படைத்தது.
பேருந்து நிலையம் இடம் மாறினால், வர்த்தகம், தொழில் பாதிக்கப்படலாம் என கருதி, சிலரின் முட்டுக்கட்டையால் பேருந்து நிலையம் கட்டுமானப் பணி முடங்கியது.
இந்நிலையில், மத்திய பொதுப்பணித்துறை மூலம் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள, குழுமம் முடிவெடுத்து, கடந்த 2016ல் ஒப்பந்தம் அளித்தது. அத்துறையினர், ஆய்வு செய்து, திட்ட செலவை 15 கோடி ரூபாய்க்கு மதிப்பிட்டனர்.
நகர்ப்புற வளர்ச்சி துறையினரோ, திட்ட மதிப்பீட்டை, 26 கோடி ரூபாய்க்கு உயர்த்தி, அதற்கேற்ப வடிவமைக்க வலியுறுத்தியதாக சர்ச்சை ஏற்பட்டது. பின், 18 கோடி ரூபாயாக மதிப்பீடு குறைக்கப்பட்டு, பணி ஒப்பந்தம் தனியார் நிறுவனத்திடம், 2019ல் அளிக்கப்பட்டது.
ஒப்பந்த நிறுவனம் மண் பரிசோதனை நடத்தியும், கட்டுமானப் பணிகள் துவக்கப்படவில்லை. மத்திய பொதுப்பணித்துறையும் கைவிட்டது.
இந்நிலையில், மாமல்லபுரம் குழுமம், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்துடன் இணைக்கப்பட்டது. பேருந்து நிலையம் கட்டுமானப் பணியை செயல்படுத்துவதாக, சி.எம்.டி.ஏ., நிர்வாகம் அறிவித்தது. அதன் அமைச்சர் சேகர்பாபு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோர், இப்பகுதியில் உயரதிகாரிகளுடன் ஆய்வு செய்தும், கட்டுமானப் பணிகள் துவங்கப்படவில்லை.
திருப்போரூர் எம்.எல்.ஏ., பாலாஜி, சுற்றுலா பகுதி முக்கியத்துவம் உணர்ந்து, பேருந்து நிலையத்தை விரைந்து அமைக்க கோரி அரசிடம் வலியுறுத்தினார். அதை தொடர்ந்து, பொது மற்றும் தனியார் கூட்டு பங்களிப்பில் திட்டத்தை செயல்படுத்த, சி.எம்.டி.ஏ., நிர்வாகம் முடிவெடுத்தது.
கடந்த ஆண்டு சட்டசபையில், அமைச்சர் சேகர்பாபு, 50 கோடி ரூபாய் மதிப்பில் அமைப்பதாக அறிவித்தார். சி.எம்.டி.ஏ., நிர்வாகமும், திட்ட மதிப்பீட்டை, 67 கோடி ரூபாய்க்கு இறுதி செய்தது.
மாமல்லபுரம் பேருந்து நிலையம், பி.பி.டி., எனப்படும் பொது, தனியார் கூட்டு பங்களிப்பு முறையில் அமைக்கப்படவுள்ளது. அதற்கான ஒப்பந்தத்தை இறுதிசெய்து, இம்மாதத்திற்குள் நிச்சயம் பணிகள் துவக்கப்படும்.
கட்டுமானப் பணிகளை 18 மாதங்களில் முடித்து, பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu